Tamilnadu
தினம் ஒரு கல்லூரி; டைம் டேபிள் போட்டு லேப்டாப் திருட்டு: கில்லாடி பட்டதாரியின் செயலால் அரண்டுப்போன போலிஸ்
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வரும் ருத்ரேஷ் என்ற மருத்துவ கல்லூரி மாணவர் உட்பட 2 பேரின் லேப்டாப்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டது. இதுகுறித்து ருத்ரேஷ் அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் லேப்டாப்களை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக லேப்டாப்பை திருடி செல்லும் நபர் குறித்து வண்ணாரப்பேட்டை போலிஸ் ஆய்வாளர் யமுனா தலைமையில் தனிப்படை அமைத்து லேப்டாப் திருடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலிஸார் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25) என தெரியவந்தது. மேலும் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் உருவமும், பிடிபட்ட நபரின் உருவமும் ஒற்றுமையாக இருந்ததால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தனிப்படை போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், இவருக்கு தாய் தந்தை இல்லை என்பதும், இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பு படித்ததும், மேலும் தொலைதூர கல்வி மூலமாக பி.எல் படித்ததும் தெரியவந்தது.
மேலும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவரின் லேப்டாப்பை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் மீது சந்தேகம் இருந்த நிலையில் தனிப்படை போலிஸார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
பிடிபட்ட தமிழ்செல்வன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லூரி பயின்ற பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிவடைந்ததால் ஆத்திரத்தில் இருந்த தமிழ்ச்செல்வன் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை காலண்டரில் அட்டவணை போட்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் தினமும் சென்று இரண்டு லேப்டாப்கள் வீதம் டார்கெட் செய்து லேப்டாப்களை திருடி அதன் வெளித்தோற்றத்தை மாற்றி ஓ.எல்.எக்ஸ் போன்ற பழைய பொருட்கள் விற்பனை செய்யும் வலைதளத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அவரை கைது செய்த போலிஸார் செம்மஞ்சேரி பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு அவர் ஏற்கனவே திருடி வைத்திருந்த 31 லேப்டாப்கள் இருந்தது. மேலும் அங்கிருந்த காலண்டரில் தினமும் ஒரு கல்லூரி என கல்லூரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த லேப்டாப்களை பறிமுதல் செய்த போலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை போலிஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!