Tamilnadu
காலை சிற்றுண்டி, மாணவர் பாராளுமன்றக்குழு.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் கல்வித்துறை அறிவிப்புகள் இதோ!
பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்வித் துறைக்கென 15 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை குறித்த விவரம் பின்வருமாறு:
1. பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைத்தல்.
பாலின பாகுபாடு இல்லாமல் நேர்மறை சிந்தனையை உருவாக்கவும், ஆரோக்கியமான அறிவுப்பகிர்தலை ஊக்குவிக்கும் வகையில் பாலின சமத்துவம் குறித்த (Gender Equality) கல்வியை மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டு பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்தான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கிரிக்கெட் / நடனம் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அறிவிப்பு : பாலின சமத்துவத்தை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மாணவ / மாணவியர்களிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.
2. பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்குதல்.
சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் அன்றாடம் கல்வி மற்றும் பொது அறிவு விவரங்களை இணையதளம் வழியாக அறிந்து தங்களை மேம்படுத்திக் கொண்டு உயர்கல்வி கற்க தங்களை தயார்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
அறிவிப்பு : 2022- 2023ஆம் கல்வியாண்டில் 70 சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய இணைப்பு (Internet Connection) வழங்கப்படும்.
3. மாணவர்களுக்கான திறன் கண்காட்சி அமைத்தல்.
சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக தங்களது படைப்புக்களை கண்காட்சி வழியாக வெளிப்படுத்த வழிவகை செய்ய வேண்டியுள்ளது.
அறிவிப்பு : 2022-2023ஆம் கல்வியாண்டில் 281 சென்னை தொடக்க / நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக ரூ.40 இலட்சம் செலவில் கண்காட்சிகள் நடத்தப்படும்.
4. விலையில்லா சீருடைகள் வழங்குதல்.
சென்னைப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற 1,86,163 மாணவர்களுக்கு இதுவரை ரூ.17,32,78,137/- தொகையில் விலையில்லா சீருடை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது
அறிவிப்பு : 2022-2023ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 72,000 மாணவ மாணவியருக்கு ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.
5. மாணவிகளுக்கு நிர்பயா (Nirbhaya) நிதியின் மூலம் நலத்திட்டம்.
அறிவிப்பு : இந்திய அரசாங்க நிதியில் செயல்படும் நிர்பயா திட்டத்தின் கீழ் தலைமைச் செயலர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள Apex Committee வாயிலாக 2022-2023ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு பின்வரும் நலத்திட்டங்கள் செய்யப்பட உள்ளது:
i. ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும்
கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும்.
ii. ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
iii. ரூ.6.91 கோடியில் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும்.
6. சென்னைப் பள்ளிகளுக்கு மாண்டிசோரி (Montessori) உபகரணங்களை பயன்படுத்துதல்.
மாண்டிசோரி உபகரணங்கள் கொண்டு குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் கற்றல், செயல்பாடுகள், வெளிப்பாடு மற்றும் நடைமுறை அறிவு ஆகியவற்றுடன் வலுவான மற்றும் சிக்கல்களை தீர்ப்பதற்கு ஏதுவாக அமையும்.
அறிவிப்பு : 2022-2023 ஆம் நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 31 பள்ளிகளுக்கு வழங்கிய மாண்டிசோரி (Montessori) உபகரணங்களை சிறந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நடைமுறைப் படுத்துவதுடன், மேலும், இக்கல்வி முறை பிற மழலையர் வகுப்புகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
7. தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாணவருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்குதல்.
Chennai Smart City Limited (CsCL) அமைப்பின் கீழ் CITIIS என்ற திட்டத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 28 பள்ளிகளை மாதிரி மற்றும் Smart பள்ளிகளாக உருவாக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்குதல், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறையில் புதிய அணுகுமுறை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அறிவிப்பு : தற்போது சிட்டீஸ் (CITIIS) திட்டத்தின் கீழ் School Management System (SMS), Learning Resources Repository Management System (LRRMS) ஆகியவற்றிற்கு ரூ.59 இலட்சம் மற்றும் ரூ.2.45 கோடியில் School Leadership Development & Transformation (SLDT) பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மட்டைப்பந்து (Cricket) மற்றும் கால்பந்து (Football) விளையாட்டுகளில் தலை சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.35 இலட்சம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
8. தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்ட சிட்டீஸ் (CITIIS) நிதியில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
சிட்டீஸ் (CITIIS) திட்டத்தின் கீழ் 28 பள்ளிகளின் உள்கட்டமைப்பு ரூ.76.27 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது.
அறிவிப்பு : இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியால் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும்.
9. சென்னைப் பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு (Imprest Amount) நிதி வழங்குதல்.
சென்னைப் பள்ளிகளில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை உடனடியாக சீர் செய்வதற்கு அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், அவற்றை உடனடியாக தீர்க்கும் வகையில் சிறு தொகைகளை இருப்பில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.
அறிவிப்பு : சென்னைப் பள்ளிகளில் குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்படும் பழுது, மின்சாதனங்களில் ஏற்படும் பழுது மற்றும் கழிவறைகளில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக சரி செய்து கொள்வதற்கு 119 சென்னை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.25,000/- வீதமும், 92 சென்னை நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.30,000/- வீதமும், 38 சென்னை உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.50,000/- வீதமும் மற்றும் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.50,000/- வீதமும் ஆக 281 தலைமையாசிரியர்களுக்கு ரூ.92.35 இலட்சம் மிகாமல் செலவு மேற்கொள்வதற்கு அவசர செலவின நிதி (Imprest Amount) வழங்கப்படும்.
10. சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்குதல்:
சென்னைப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் காலையில் சிற்றுண்டிகள் கிடைக்காத நிலையில் வகுப்பில் சோர்வு நிலையில் உள்ளதால் கல்வி கற்பதில் தொய்வு ஏற்படுவதை நீக்கும் பொருட்டு காலைச் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
அறிவிப்பு : சென்னைப் பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம், மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக் காத்து கல்வியை திறம்பட கற்றிட, திருவான்மியூரை சுற்றியுள்ள 23 சென்னைப் பள்ளிகளில் சுமார் 5,000 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் மூலம் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால், மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்களின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
11. இளைஞர்கள் பாராளுமன்ற குழு அமைத்தல்.
அறிவிப்பு : சென்னைப் பள்ளி மாணவர்களிடையே மேடைப் பேச்சு, விவாதம், படைப்புத்திறன், சிந்தனை வளர்த்தல், குழுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைத்துவ பண்பை வளர்க்கவும், சர்வதேச விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி ஐக்கிய நாடு குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்தவும், ஒழுக்கம், சகிப்புத்தன்மை, ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்கவும், பாராளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில் இளைஞர்கள் பாராளுமன்ற குழு அமைக்கப்படும்
12. பள்ளி-இல்ல நூலகம்.
சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், பொது அறிவினை வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை திறம்பட எதிர்கொள்வதற்கு ஏதுவாக பள்ளி நூலகங்களிலிருந்து புத்தகங்களை வீட்டிலும் பயன்படுத்த வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
13. பேட்ஜ் வழங்குதல் மற்றும் குழுக்கள் அமைத்தல்.
பள்ளியில் கற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேட்ஜ் வழங்கும் முறையும் மற்றும் ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து மாணவர்களிடையே (சிவப்பு, ஊதா, பச்சை மற்றும் மஞ்சள்) பொறுமை, தலைமை பண்பு, சரியான முடிவு எடுத்தல், சகிப்புத்தன்மை, குழுவாக பணிசெய்தல் போன்ற பண்புகளை வளர்க்க வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
14. பள்ளிகளில் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்தல்.
அறிவிப்பு : 20 சென்னைப் பள்ளிகளில் ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே ஆங்கிலம் பேசும் திறனை வளர்ப்பதால் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உலகத்தின் எப்பகுதிக்கு சென்றாலும் எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக பல பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
15. பள்ளிகள் பராமரிப்பு பணி.
அறிவிப்பு : சென்னைப் பள்ளிகளில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள ஏதுவாக 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.16.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!