Tamilnadu
“7 பேரின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளோம்” : ஐகோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்!
முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக பேரறிவாளன் மட்டுமல்லாமல், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அ.தி.மு.க அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.
நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் எனவும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டி விடுதலை செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் எனவும் தெரிவித்தார்.
பின்னர், முன்கூட்டி விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பேரறிவாளன் மட்டுமல்லாமல், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை என தெரிவித்தார். இதையடுத்து, எந்த தேதியில் ஆளுநர், இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை குடியரசு தலைவருக்கு அனுப்பினார் என தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!