Tamilnadu

”தி.மு.கவின் சமூக நீதி பயணத்துக்கு கிடைத்த இந்த 3வது வெற்றி ஹாட்ரிக் வெற்றியாகும்” - முதல்வர் பெருமிதம்!

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என தீர்ப்பளித்ததோடு, இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.கவின் தொடர் சமூக நீதி பயணத்துக்கான சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மூன்றாவது வெற்றி இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மடல் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த பத்து மாதங்களில் தி.மு.கவுக்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றி இது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி முதலமைச்சரின் மடலில், ”மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை உறுதிசெய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முதல் வெற்றி.

மருத்துவ மேற்படிப்புகளில் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரண்டாவது வெற்றி.

அதன் தொடர்ச்சியாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர தொழிற்படிப்புகளில் முன்னுரிமை வழங்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்கிற உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மூன்றாவது வெற்றி.

தொடர்ச்சியான இந்த ‘ஹாட்ரிக்’ வெற்றி என்பது, சமூகநீதிப் பயணத்தில் இன்னும் பல களங்களை உறுதியுடன் எதிர்கொள்வதற்கான ஊக்கத்தையம், உத்வேகத்தையும் அளிக்கிறது. ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "7.5% தீர்ப்பு .. சமூக நீதிப் பயணத்திற்கு கிடைத்த 3வது வெற்றி" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!