Tamilnadu

மகளின் சிகிச்சைக்காக கடன் வாங்கியவரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்த பா.ஜ.க நிர்வாகி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு கடன் வாங்கியதற்காக, பல கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்தை அபகரித்ததாக நிலத்தின் உரிமையாளர் பா.ஜ.க நிர்வாகி மீது புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரெகுகுமார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும், மன வளர்ச்சி குன்றிய 22 வயதான ஒரு மகளும் உள்ளனர். மன வளர்ச்சி குன்றிய மகளின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் செலவு செய்ததால் ரெகுகுமார் வறுமையில் பரிதவித்து வந்தார்.

இந்நிலையில், தனது ஒன்றரை கோடி ருபாய் மதிப்புள்ள சொத்தை பா.ஜ.க மாவட்ட பிரச்சார அணி தலைவரான தொழில் அதிபர் ஜெயப்பிரகாஷ் என்பவர் அபகரித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டி, நேற்று நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

பின்னர் ரெகுகுமார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், “மனவளர்ச்சி குன்றிய எனது மகளின் மருத்துவச் செலவிற்காக பணம் தேவைப்பட்டதால் எனது உறவினரான ஜெயப்பிரகாஷை சந்தித்து கடனாகப் பணம் கேட்டேன். அதன் பெயரில் நட்டாலம் பகுதியில் உள்ள பல கோடி மதிப்புள்ள எனது சொத்து பத்திரங்களை வாங்கிக்கொண்டு ஒன்பது லட்ச ரூபாய் கடனாக ஜெயபிரகாஷ் கொடுத்தார்.

பின்னர் வாங்கிய கடனில் பெரும்பகுதியை செலுத்திய பின்பும் எனது சொத்தை தன்னிடம் தராமல் தன்னிடம் வழங்கிய கடன் தொகைக்கு கந்துவட்டியாக 38 லட்சம் ரூபாயை ஜெயபிரகாஷ் கேட்கிறார்.

நான் மத்தியில் ஆளும் கட்சியின் முக்கிய பதவியில் உள்ளேன். உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. நான் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் சொத்தை விற்றுவிடுவேன் என மிரட்டி வருகிறார்.

ஜெயப்பிரகாஷ் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி, சொத்தை அபகரிக்க முயற்சிப்பதால் அதை தடுத்து நிறுத்தி எனது சொத்தை மீட்டுத்தர மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “வயதான தம்பதியை தாக்கி பணம் கேட்டு, கொலை மிரட்டல்” : பா.ஜ.க பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு !