Tamilnadu

“நட்டா சொல்ல.. எடப்பாடி செய்ய.. நல்ல கூத்தா இருக்கே” - நகைச்சுவைக்கு அளவே இல்லையா அண்ணாமலை?

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படியே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்து தங்களின் வெற்றி போல மெச்சிக்கொண்டிருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவினை நிர்மூலமாக்கும் பா.ஜ.க அரசின் நீட் தேர்வால் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீட் தேர்வை எதிர்த்தும், இட ஒதுக்கீட்டிற்காகவும் தி.மு.க தொடர்ந்து போராடி வருகிறது.

தி.மு.க-வின் தொடர் போராட்டங்களையும், தமிழக மக்களின் கொந்தளிப்பான மனநிலையையும் சமாளிப்பதற்காக, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.

கடந்த ஆட்சியில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியான தி.மு.க தொடர்ந்து போராடியது. ஆளுநர் மாளிகை முன்பாக தி.மு.க நடத்திய மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தார்.

2021ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்ததும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற் படிப்புகளிலும் 7.5% இட ஒதுக்கீடு செய்ய, “இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்’’ இயற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தவகையில், கல்விக் கட்டணம் விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என மொத்தம் ரூ. 74 கோடியே 28 லட்சம் தி.மு.க அரசால் ஒதுக்கீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, 7.5% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், “பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது.” என வாதத்தை எடுத்துரைத்தார்.

தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பி-யுமான பி.வில்சன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது. அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது என்று வாதிட்டார்.

பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு "தமிழக அரசின் உத்தரவு செல்லும். இட ஒதுக்கீட்டை எதிர்த்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது" என அறிவித்தது.

இந்த வழக்கில் வாதாடிய ஒன்றிய அரசு தரப்பில், “ஒரே நாடு - ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டம் மருத்துவக் கல்வியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்” என வாதிடப்பட்டது.

இந்நிலையில்தான் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு பா.ஜ.க வரவேற்கிறது.

எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2017ஆம் ஆண்டு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உள் ஒதுக்கீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்த எங்கள் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி” என ட்வீட் செய்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாவதற்கு, ஆட்சியில் இல்லாதபோதும், ஆட்சிக்கு வந்தபிறகும் கடுமையான சட்டப் போராட்டங்களையும், மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்த தி.மு.க அரசின் சாதனையை, தங்களின் வெற்றி போல பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மெச்சிக்கொண்டிருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

Also Read: “கர்நாடகா குட்டு வெளிய வந்துரும்.. ஜாக்கிரதை” : வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட அண்ணாமலை!