Tamilnadu
“SP உடன் தேநீர் அருந்தவேண்டுமா?” : கஞ்சா புழக்கத்தை அறவே ஒழிக்க வருண்குமார் IPS-ன் அதிரடி திட்டம்!
“கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர் 'SP உடன் தேநீர்' அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்” என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி டி.ஜி.பி சைலேந்திரபாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை முற்றாகத் தடுக்கும் வகையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 அதிரடி திட்டத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு கையில் எடுத்துள்ளார். கஞ்சா புழக்கத்தை அடியோடு ஒழித்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள போலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் கஞ்சா கடத்துபவர்கள், விற்பவர்கள் என அவர்களின் மொத்த நெட்வொர்க்கையும் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், கஞ்சாவை ஒழிக்க உதவினால் மாவட்ட எஸ்.பியுடன் தேநீர் அருந்தலாம் எனவும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் வழங்கப்படும் எனவும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வருண் குமார் அவர்கள் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள 63799-04848 என்ற அலைபேசிக்கு கஞ்சா கடத்தல், குட்கா கடத்தல் மற்றும் ட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள் வாட்ஸ்-அப் மூலம் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் இடம், மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அனுப்பலாம். தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் ரகசியம் காக்கப்படும். தெரிவித்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டால் ரூபாய் 10,000 சன்மானம் அளிக்கப்படும். இது காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.
கல்லுாரி வளாகம், பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி ஸ்தாபனங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவிடுவோர் "SP உடன் தேநீர்" அருந்த அழைப்பு விடுக்கப்பட்டு உரிய மரியாதையுடன் தேனீர் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
மேலும் அவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் ரகசியமாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. "இளைய சமுதாயத்தை மற்றும் வருங்கால தமிழகத்தை காக்க உதவிடுங்கள்" என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கோரிக்கை விடுத்தார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!