Tamilnadu
சொத்து வரி சீராய்வு - “எதிர்க்கட்சி, தோழமை கட்சிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள்” : முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சொத்து வரி சீராய்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
"மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றிருக்கக்கூடிய தலைவர்கள் உள்பட அனைவரும் தங்களுடைய கருத்துகளையெல்லாம் இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நேற்றைய தினம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை அழைத்து, எடுத்துச் சொல்லியிருந்தாலும், சட்டமன்றத்திலும் அதற்குரிய விளக்கத்தை முறையாக வழங்கிட வேண்டுமென்று நான் அவருக்குத் தந்த உத்தரவின் அடிப்படையிலே, அவரும் இங்கே சில விளக்கங்களையெல்லாம் உங்களிடத்திலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
எனவே, நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சுருக்கமாக நான் தெரிவிக்க விரும்புவது, இந்த சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. நான் அதை மனப்பூர்வமாக இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறுகிறபோது, அதைச் சமாளிக்கவேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்பட்டது. ஏனென்றால், முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையில் இருந்தன.
மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய்ப் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதில் கூட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அதை சோதனையாக சந்தித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உள்ளாட்சி அமைப்புகளிலே பொறுப்பேற்றிருக்கக் கூடியவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்? அங்கே ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு நிதியை எதிர்பார்ப்பார்கள்.
ஆகவே, இந்த நிலையிலேதான் மக்களை பாதிக்காமல், குறிப்பாக அடித்தட்டு மக்களை, ஏழை, நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய சொத்து வரி சீராய்விலே, கட்டடங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்யக்கூடிய திட்டம் இதிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், நகர்ப்புறத்தில் மொத்தம் உள்ள குடியிருப்புகளைப் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 83 விழுக்காடு மக்களை இந்த வரி விதிப்பு பெரியதாக பாதிக்காது என்பதுதான் உண்மை. ஆகவேதான், பத்திரிகைகளும், ஊடகங்களும்கூட இந்த அரசினுடைய முயற்சியைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
“அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கூடிய கட்டாயம். அதற்கு நிதி ஆதாரம் அவசியம் தேவை” என்றும், “இப்போதுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என்றும் நேற்றைய தினம் தினத்தந்தி பத்திரிகையின் தலையங்கத்திலேயே இதுகுறித்துக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
பேரவையில் அமர்ந்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவரையும், இந்த அரசின் சார்பிலே பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, கட்சி வேறுபாடின்றி நான் சொல்ல விரும்புவது, அரசின் இந்த முடிவுக்கும், மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிடவும், நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சி மற்றும் எங்கள் தோழமைக் கட்சிகளுக்கும் எனது அன்பான வேண்டுகோள்! மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் மட்டுமின்றி, இங்கு அமர்ந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் சட்டமன்றத் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.”
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?