Tamilnadu

சும்மா போன யானைகளை சீண்டிய இளைஞர்கள்.. குட்டிகளை காப்பாற்ற விரட்டி வந்ததால் பரபரப்பு!

குன்னூர் அருகே குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் சாலையைக் கடந்து தண்ணீர் குடிக்கச் செல்லும்போது சில இளைஞர்கள் பேருந்திலிருந்து இறங்கி சாலையில் நடந்த யானை கூட்டத்தோடு செல்ஃபி எடுக்க முயன்றபோது யானைகள் இளைஞர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், காட்டேரி, சேலாஸ், கரும்பாலம் போன்ற பகுதிகளில் மூன்று குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வாறு கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் மலை ரயில் தண்டவாள பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் உலா வருகின்றன.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் குன்னூரில் இருந்து சேலாஸ் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் கரும்பாலம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து சாலையை கடந்து தண்ணீர் குடிப்பதற்காக மூன்று குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் சாலையில் நடந்து வந்தபோது சில இளைஞர்கள் பேருந்திலிருந்து இறங்கி யானைகளுடன் நின்று செல்ஃபி எடுக்க முயன்றனர்.

அப்போது குட்டிகளை தற்காத்துக்கொள்ள மூத்த தாய் யானை ஒன்று செஃல்பி எடுக்க முயன்ற இளைஞர்களை விரட்டியது. அப்போது இளைஞர்கள் அலறியடித்து ஓடிச் சென்று பேருந்தில் ஏறினர்.

இதைத்தொடர்ந்து அந்த யானைக்கூட்டம் யாருக்கும் எந்த ஒரு இடையூறும் செய்யாமல் சாலையைக் கடந்து தண்ணீர் குடிக்கச் சென்றது. இருப்பினும் யானைகளை இடையூறு செய்த இளைஞர்களை கண்டறிந்து எச்சரித்த வனத்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான வனச்சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: Viral Video : ”பாகுபலி பிரபாஸ் பாணியில் ஒய்யாரமாக யானை மீது ஏறிய முதியவர்” - அசந்துபோன நெட்டிசன்கள்!