Tamilnadu
நீதிபதி வீட்டில் தங்கி குடித்து கும்மாளம் அடித்து தவணை முறையில் நகை, பணம் கொள்ளை.. நேபாளி கும்பல் கைவரிசை
சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் பூந்தமல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும், அண்ணாநகர் சாந்தி காலனி 8வது மெயின் ரோடில் உள்ள தனது மற்றொரு வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். சுமார் 5 லட்ச ரூபாய் பணமும், ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது போலிஸாருக்கு சவாலாக இருந்தது. பின்னர் கடப்பாரை கொண்டு வீட்டை உடைத்து கொள்ளை அடித்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கொள்ளையடித்த நபர்கள் எங்கே சென்று உள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த போது, வீட்டில் ஒரு சில சிசிடிவி காட்சியில் சைக்கிள் ஒன்று தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் இருந்த காட்சிகள் தென்பட்டன. ஆனால் 2,3 நாட்களுக்கு பிறகு அந்த சைக்கிள் ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் இல்லை. கொள்ளைச் சம்பவத்தில் நீதிபதியின் சைக்கிள் திருடு போனதாக என போலிஸார் விசாரணை செய்ததில், அந்த சைக்கிள் நீதிபதிக்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் பிறகு விசாரணை சூடு பிடித்துள்ளது. கொள்ளையர்கள் சைக்கிளை பயன்படுத்தி வீட்டிற்கு வந்து 2 நாட்கள் தங்கி கொள்ளையடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக நீதிபதியின் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொள்ளை நடந்த சம்பவம் முன்னதாக ஆய்வு செய்து பார்த்தபோது, மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்த பொருளை சைக்கிளில் எடுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் போலிஸாரிடம் சிக்கின.
இந்த சிசிடிவி காட்சிகள் செல்லும் வழியில் போலிஸார் தேடிச் சென்றபோது செனாய் நகரில் ஒரு வீட்டில் சென்றடைந்தது. அந்த வீட்டில் போலிஸார் ஆய்வு செய்த போது நீதிபதி வீட்டில் கொள்ளையடித்த பொருட்கள் சில சிதறிக்கிடந்தன. அந்த வீட்டில் தங்கியிருந்த பூபேந்தர் என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரை விசாரணை செய்தபோது கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டபோது, 5 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து கொள்ளை அடித்ததாக பூபேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார். நேபாள நாட்டைச் சேர்ந்த லால், கணேசன், பட்ராய் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலிஸார் தேட ஆரம்பித்தனர்.
செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை போலிஸார் தேடும்போது, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு செல்போன் சிக்னல்கள் சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து தனிப்படை போலிஸார் பெங்களூரு ஹைதராபாத் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பெங்களூரில் கணேசன் மற்றும் பட்ராய் ஆகிய இரு நேபாள நாட்டை சேர்ந்தவர்களை போலிஸார் கைது செய்தனர். மேலும் லால் என்ற மற்றொரு நேபாளத்தை சேர்ந்தவரும் சென்னையில் கைதானார்.
பிடிபட்ட நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டதில், லால் என்பவர் ஷெனாய் நகரில் காலி மனையில் காவலாளியாக இருந்து வந்ததாகவும், ஷெனாய் நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் சைக்கிளில் செல்லும்போது, பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு வைத்திருந்ததையும் தெரிவித்துள்ளார். அதன்பின் காவலாளிகளாகப் பணிபுரியும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் உடன் பழகி ஆளில்லாத வீடுகள் எவை எவை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
அந்த அடிப்படையில்தான் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் வீடானது கடந்த 5 மாதங்களாக பூட்டியிருப்பது கொள்ளை கும்பலுக்கு தெரியவந்துள்ளது. இது போன்ற விவரங்களை தெரிந்து கொள்வதற்காக லால் தான் காவல் காக்கும் காலிமனை பகுதியில் ஆடுகளைத் திருடி காலி மனை பகுதியிலேயே வெட்டி சமைத்து நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கறிவிருந்து நடத்தியதும் தெரிய வந்துள்ளது.
இப்படியாக லாலுக்கு நட்பான கணேசன், பட்ராய், பூபேந்தர், ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறார். இதில் பிடிபட்ட கணேசன் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளது.
குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் சென்று மது அருந்தி சாப்பிட்டு கொள்ளைக் கும்பல் தங்கியுள்ளன. இரண்டாவது நாளில் கடப்பாரை கொண்டு வீட்டை உடைத்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். எனினும் யாரும் புகார் அளிக்காததால், மூன்றாவது நாள் வீட்டில் உள்ள வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களை பொறுமையாக கொள்ளை அடித்து சென்றுள்ளனர். வீட்டில் கொள்ளை நிகழ்ந்தது 29-ஆம் தேதிதான் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாத்திற்கு தெரியவந்துள்ளது.
இவ்வாறாக வீட்டில் தங்கி, குடித்து உல்லாசமாக இருந்து தவணை முறையில் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய , இன்னும் சில நேபாள நாட்டினரையும் போலிஸார் தேடி வருகின்றனர். பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணமும் சுமார் ஐம்பது சதவீத அளவிலான நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொள்ளையடித்த பணத்தை வைத்து நேபாள நாட்டு கொள்ளையர்கள் விலை உயர்ந்த செல்போன், விமான பயணம், மது விருந்து என உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேபாள நாட்டு தூதரக அதிகாரிகளிடம் சென்னை போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். நேபாள நாட்டில் குற்றங்கள் ஏதும் செய்துள்ளார்களா என்பது குறித்தும் கேட்டுள்ளனர்.
குறிப்பாக சைக்கிள் அடையாளம் வைத்து அண்ணா நகர் தனிப்படை போலிசார் நேபாள நாட்டு கொள்ளையர்களை சாதுர்யமாக பிடித்துள்ளனர். புகார் அளித்த 5 நாட்களில் கொள்ளை கும்பலை கைது செய்த காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்
குறிப்பாக கைது செய்யப்பட்ட 4 நேபாள நாட்டு கொள்ளையர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க போலிஸார் திட்டமிட்டுள்ளனர். இதேபோன்று எத்தனை வீட்டில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். எந்தெந்த வீட்டை கொள்ளையடிக்க திட்டமிட்டு வைத்துள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!