Tamilnadu

Electric ஸ்கூட்டர் எரியுது.. புல்லட் பைக் வெடிக்குது : உங்க வண்டியை பாதுகாக்கும் 5 அறிவுரைகள் இதோ!

வெளிநாடுகளைப் போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகியுள்ள OLA மின்சார இரு சக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் இந்நிறுவனத்தின் மின்சார வாகனம் தீ பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

இப்படி மின்சார வாகனம் ஒரு புறம் எரிந்து வந்த நிலையில் தற்போது ஆந்திராவில் புல்லட் பைக் வெடித்துள்ளது மற்றொரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் புல்லட் பைக்குகள் தீ விபத்துகளைச் சந்தித்து வருவது அதன் பயனாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தீ விபத்துகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து நாம் இங்கே பார்ப்போம்:-

மின்சார வாகனங்களை வாங்குவதற்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வாடிக்கையாளர் கையேட்டை படித்து, முன்னெச்சரிக்கை அறிவுரைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், பேட்டரியுடன் பொருந்தக்கூடிய பிராண்ட் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பவர் பேட்ச் வயர்களை பயன்படுத்தக் கூடாது. மின்சார வாகனத்திற்கான சார்ஜரை நேரடியாக சுவர் வழி மின்சார மெயின் போர்டில் மட்டுமே சொருக வேண்டும்.

வாகனம் சார்ஜ் செய்யும் போது எச்சரிக்கை ஒலி நீங்கள் கேட்கக்கூடிய இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனம் வெள்ளத்தில் சிக்கியிருந்தால் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மின்சார வாகனத்தின் பேட்டரியை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாற்ற வேண்டும்.

மேலும் மின்சார வாகனத்தின் தொழில் நுட்பம் ஒவ்வொரு ஆண்டிற்கும் மாறிவருகிறது. இதை நாம் புரிந்து கொண்டு அதன்படி வாகனத்தைப் பராமரித்து வர வேண்டும். வாகனம் தீ பிடித்து விட்டால் அதை நாமே அணைக்க முயற்சி செய்யக் கூடாது. உடனே தீயணைப்புத் துறைக்குத் தெரிவித்து அந்த இடத்திலிருந்து தூரமாகச் சென்றுவிட வேண்டும்.

Also Read: “ஆசை ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் பைக் - சார்ஜ் செய்யும்போது நடந்த விபரீதம்”: தீயில் கருகி தந்தை, மகள் பலி!