Tamilnadu
டெல்லியில் ‘Press Meet’ நடத்திய முதலமைச்சர்... பிரதமர், அமைச்சர்கள் உடனான சந்திப்பு குறித்து விளக்கம்!
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் 14 முக்கிய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
மேலும், டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முதலமைச்சரான பின் எனது 3வது டெல்லி பயணம் இது. என்னை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.
பிரதமருடனான இன்றைய சந்திப்பின்போது அவரிடம் தமிழகம் சார்ந்த 14 அம்ச கோரிக்கைகளை வழங்கினேன். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
குறிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். நீட்விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதை சுட்டிக்காட்டினேன்.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம். மதுரவாயல் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். பிரதமர் உடனான சந்திப்பு மனநிறைவு தருவதோடு மகிழ்ச்சியையும் அளிக்கிறது. டெல்லியில் உள்ள தமிழ் மாதிரி பள்ளிகளை நாளை பார்வையிட உள்ளேன்.
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறி உள்ளேன். தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்.
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தாம்பரம் செங்கல்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். சென்னை மதுராவாயல் சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வலியுறுத்தினேன்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்