Tamilnadu
’சென்னையில் சாலை விதியை மீறிய டெலிவரி பாய்ஸ்’ : ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு.. டிராஃபிக் போலிஸ் அதிரடி!
சென்னை பெருநகரில் ஏராளமான மொபைல் ஆப் அடிப்படையிலான உணவு விநியோக சேவைகள் (ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை) செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை பிரபலமாக அதிகரித்து வருவதுடன், உணவு விநியோக பணியாளர்களின் எண்ணிக்கை ஒருங்கிணைப்பாளர்களால் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த மொபைல் ஆப் அடிப்படையிலான உணவு விநியோகச் சேவைகளில் பெரும்பாலானவை மிகக் குறுகிய நேரத்தில் உணவை வழங்குவதாக உறுதியளிக்கின்றன. இது உணவை விநியோகம் செய்பவர்கள் விரைவாக வாகனம் ஓட்டுவதற்கு நெருக்கடி கொடுக்கிறது.
அவர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன் விதிமுறைகளின் காரணமாக, பெரும்பாலான உணவு விநியோக வாகன ஓட்டிகள் சிக்னல் மீறல், எதிர் திசையில் வாகனம் ஓட்டுதல், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது கைபேசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வேகத்தில் சென்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தினால் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர் என்பதும் சென்னை பெருநகர காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வாறு விரைவாக விநியோகம் செய்வதின் மூலம், அவர்களின் உயிரையும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த விதிமீறல்களை குறைக்கும் வகையில், உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் மற்றும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டிருக்கின்றன.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு அடுத்த கட்டமாக காவல்துறை இயக்குநர் / காவல்துறை ஆணையர், சென்னை பெருநகர காவல் மற்றும் கூடுதல் காவல் ஆணையாளர் போக்குவரத்து அவர்களின் அறிவுறுத்தல்களின்படி போக்குவரத்து விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக ஹெல்மெட் அணியாதது மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றைக் கண்டறிந்து, நேற்று (மார்ச் 30) சிறப்பு வாகன தணிக்கை சென்னை பெருநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த சிறப்பு தணிக்கையின் போது 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்ற நிறுவனங்களின் வாகன ஓட்டிகள் அதிகளவில் விதி மீறல் செய்தது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!