Tamilnadu
“ரூ.2,600 கோடி முதலீடு.. 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு” : துபாய் பயணத்தில் சாதித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டிற்கு 2,600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் அமைப்புடன் சந்திப்பு
இன்று (26.03.2022) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் சிறப்புகளையும், தமிழகத்தில் சிறந்த தொழில் சூழல் நிலவுவதையும் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைப்பின் உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன:
துபாயைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் (Noble Steel Company), 1,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஒரு உற்பத்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மொகம்மது அஷ்ரஃப் சாகுல் அமீத் (Mr. Mohamed Ashraf Shahul Ameed) கலந்து கொண்டார்.
துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் (White House), 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், 3 வருடத்தில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்திலும், 5 வருடத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலும், என இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் (Integrated Sewing Plants) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஏ.மொகம்மது இல்யாஸ் (Mr. A. Mohamed Elyas) கலந்துகொண்டார்.
துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமம் (M/s. Transworld Group) 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உணவுப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, UAE சர்வதேச முதலீட்டாளர்கள் அமைப்பின் செயலாளர்-பொது, H.E. ஜமால் சாயிப் அல் ஜர்வான் அவர்கள் பேசும்போது, தொழில் முதலீட்டை பொறுத்தவரை தமிழகம் ஒரு முக்கியமான மாநிலம் என்றும், இப்பகுதியிலுள்ள முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய சிறப்பான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, IBPC Dubai நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் குமார், சர்வதேச லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி மற்றும் இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி ஆகியோர் உடனிருந்தனர்.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் சந்திப்பு
இன்று (26.3.2022) மாலை மற்றொரு நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கீழ்க்கண்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
ஆஸ்டர் DM ஹெல்த்கேர் அமைப்பு (Aster DM Healthcare), 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு (3000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் 500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு) என்ற வகையில், 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆஸ்டர்
DM ஹெல்த்கேர் அமைப்பின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆசாத் மூப்பன் (Dr. Azad Moopen) கலந்து கொண்டார்.
ஷெராப் குழும நிறுவனம் (Sharaf Group), தமிழ்நாட்டில், 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைத்திடுவதற்காக, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுமத்தின் துணைத் தலைவர் H.E. மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஷெராப்ஃபுதின் ஷெராப் (Major Gen (Rtd.) Sharafuddin Sharaf) மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷியாம் கபுர் (Mr. Shyam Kapur) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வுகளின் போது, மொத்தம் 2,600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
துபாய் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் சந்திப்பு
1) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஃபராபி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் (Farabi Petro Chemicals) தலைமைச் செயல் அதிகாரி திரு. முகம்மது அல் வாதே அவர்களுடனான (Mr. Mohammed Al-Wadaey) சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் உள்ள 4 பெரும் துறைமுகங்கள், சாலைகள் மற்றும் இரயில் இணைப்புகள் பற்றியும், திறன்மிகு பணியாளர்கள், மேம்பட்ட வணிகச்சூழல் போன்றவற்றை எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் ஒரு இரசாயன வளாகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திடுமாறு கேட்டுக் கொண்டார்.
2) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உலகப் புகழ் பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை நிறுவியவர்களும், மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனர்களுமான எம்மார் பிராப்பர்டீஸ் (EMAAR Properties) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹாதி பத்ரி அவர்களுடனான (Mr. Hadi Badri) சந்திப்பின்போது, இக்குழுமத்தினை தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஜெபல் அலி தடையில்லா வர்த்தக மண்டலத்தை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். முன்னதாக மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (26.3.2022) காலை, துபாயில் உள்ள ஜெபல் அலி தடையில்லா வர்த்தக மண்டலத்தினை (Jebel Ali Free Zone – JAFZA) பார்வையிட்டார்.
இந்த ஜெபல் அலி தடையில்லா வர்த்தக மண்டலம், மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரிய துறைமுகமும் வர்த்தக மண்டலமும் கொண்டதாகும். இந்த தடையில்லா வர்த்தக மண்டலம், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய சேவைகள் மற்றும் வணிகத் தீர்வு வழங்கிடும் DP வேல்ட்டு (DP World) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வணிக வர்த்தக மையப் பிரிவாகும். இந்தத் தடையற்ற வணிக மண்டலம், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு வாய்ப்புகளையும், மிகப் பெரிய சந்தையையும் வழங்கி வரும் நிறுவனமாக விளங்குகிறது.
இந்த தடையில்லா வர்த்தக மண்டலத்தில் உள்ள தானியங்கி கொள்கலன் முனையத்தினையும் (Automotive Container Terminal), இம்மண்டலத்தின் கிடங்கு வசதிகள், சேமிப்புக் கிடங்குகள், வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான விநியோகம், பரிமாற்றம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் போன்றவற்றை மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுர் மாவட்டத்தில் DP World நிறுவனம் ஒரு தடையில்லா வர்த்தக மண்டலத்தை உருவாக்கி வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் ஒரு தடையில்லா வர்த்தக மண்டலம் அமைத்திட, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், DP World நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!