Tamilnadu
தமிழ்நாட்டிற்கு குறைந்த நிதியை ஒதுக்கி அநீதி இழைக்கும் ஒன்றிய அரசு: கனிமொழி என்.வி.என்.சோமு MP கண்டனம்!
ஒன்றிய அரசின் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கலந்துகொண்டு பேசியதாவது: சில பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை பற்றி மட்டும்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போதோ, ரயில்வே துறையே விற்பனைக்கு தயாராக இருக்கிறது என்பதை முதலில் இந்த அவையிலுள்ள உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ரயில்வே கட்டணச் சலுகை!
அரசின் துறைகளை தனியார் மயமாக்குவது... அரசின் சொத்துக்களை விற்பது என்று தங்களுக்கு நன்கு தெரிந்த விஷயத்தில்இந்த ஒன்றிய அரசு உறுதியாக நிற்கிறது. ரயில்வே தனியார் மயம்... ரயில் நிலையங்கள் தனியார்மயம்... என்று பட்டியல் நீள்கிறது. ரயில் டிக்கெட் விற்பனையில் தொடங்கிய பயணம் ரயில்வே துறையை விற்பதில் போய் நிற்கிறது. என்னே முன்னேற்றம்!
பதிமூன்று லட்சம் ஊழியர்களைக்கொண்ட உலகின் நான்காவது பெரிய துறையாக விளங்குவது நமது ரயில்வே துறை. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில் தினசரி இரண்டு கோடியே முப்பதுலட்சம் மக்கள் 13 ஆயிரம் ரயில்களில் 64 ஆயிரம் கி.மீ. ரயில் பயணப் பாதையில் பயணிக்கிறார்கள். நமது நாட்டின் மிகப்பெரும் பாலான மக்களின் வாழ் வாதாரம் ரயில்வே துறையைச் சார்ந்தே இருக்கிறது.
ஒன்றிய அரசு விரும்புகிறதோ இல்லையோ, இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் மிக உன்னதமான பணியைச் செய்துவந்தது ரயில்வே துறை. செய்து வந்தது என்று இறந்த காலத்தில் நான் குறிப்பிடக் காரணம், இந்த பா.ஜ.க. ஒன்றிய அரசின் கொள்கையான எதேச்சதிகாரம், வெறுப்புணர்வை வளர்ப்பது, சமூக நீதியைச் சிதைப்பது போன்ற கொள்கைகளை இப்போது ரயில்வே துறையும் பரப்ப ஆரம்பித்திருக்கிறது என்பதால் தான்!
இதை நான் போகிறபோக்கில் சொல்லவில்லை. அதற்கு ஆதாரமாக சில உதாரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவ வல்லுனர்கள், உள்ளிட்ட சுமார் 53 வகையானவர்கள் சலுகை கட்டணத்தில் ரயிலில் பயணித்து வந் தார்கள். ஆனால், இப்போது வருமானத்தைமட்டுமே மனதில் வைத்து, விலக்கப்படும் கட்டணச்சலுகை! மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல பிரிவினருக்கு கட்டணச்சலுகை விலக்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்புதான்லாபத்தை மனதில் வைத்துரயில்வே செயல்பட்டது.
இப்போதும் இந்த ஒன்றியஅரசு லாபத்தை மனதில்வைத்துதான் ரயில்வே துறையை இயக்குகிறது என்றால், நாம் இன்னும் சுதந்திரத்திற்கு முந்தையகாலத்தில்தான் இருக்கறோமா? அப்படியானால் இதை சமூக அநீதி என்று தானே அழைக்க முடியும்? இந்த அவல நிலையைப்போக்கும் வகையில் முன்பதிவு செய்யப்படாத மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வகுப்பில் மட்டுமாவது பறிக்கப்பட்ட கட்டணச் சலுகைகளை சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். ரயில்வே என்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதிதான் ரயில்வே அமைச்சரே தவிர, ஒருபன்னாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அவர் அல்ல என்பதை மதிப்பிற்குரிய ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த நேரத்தில் ஏழைகளின் நலனை மனதில் வைத்து இந்தத் துறையை நிர்வகித்ததுடன் லாபகரமாகவும் இத்துறையை மாற்றிக்காட்டிய மதிப்பு மிகு லாலு பிரசாத் யாதவ் அவர்களை நினைவுகூர்கிறேன். ரயில்களில் சுற்றுச் சூழல் பற்றி இப்போது நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபற்றிச் சிந்தித்தவர் அவர்தான். ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீயை மண்குவளைகளில் விற்க வழிவகுத்தவர் அவரே. அவரும் ரயில் நிலையத்தில் டீ விற்றவர்தான். ஆனால்அவர் ரயில்வே துறையை விற்க நினைத்ததில்லை!
இந்த உலகத்தில் மனிதனுக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள், உணவு, உடை மற்றும் இருப்பிடம். ஒவ்வொரு மனிதனுக்கும் இம் மூன்றும் முழுமையாக் கிடைப்பதை உறுதி செய்வதே எந்த ஒரு அரசின் கட மையாகவும் பொறுப் பாகவும் இருக்க முடியும். மக்களுக்கு உணவளிக்கும் வாய்ப்புள்ள ஒருசில துறைகளில் ரயில்வே துறைக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது. மனிதனின் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன விஷயங்களில் உணவும் ஒன்று. ஆனால், உணவு விஷயத்தில் மக்களின் கலாச்சார அடையாளங்களை அழிக்கும் வகையில் ரயில்வே துறை செயல்படுகிறது.
வட நாட்டு உணவைத் திணிக்கும் கட்டாயம்!
இதற்கு உதாரணமாக, எங்கள் மாநிலத்தில் நடக்கும் விஷயத்தையே சொல்லலாம். கோவையிலிருந்து சென்னைக்கு செல்லும்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் தமிழ் நாட்டுப்பயணிகள், ரொட்டி, பன்னீர், பருப்பு, சன்னா போன்ற வட மாநில மக்கள் விரும்பிசாப்பிடுகிற உணவு வகைகளை வாங்கி சாப்பிடும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின் உணவு வகைகளான இட்லி தோசை, சாம்பார், வடைபோன்ற உணவு வகைகளை அந்த ரயிலில் விற்க வசதி இருந்தும், அவர்களின் கலாச்சாரத்திற்குதொடர்பே இல்லாத உணவுகளை சாப்பிடும் நிலைக்கு அவர்களைத் தள்ளுவது ஏன்? தமிழ்நாடு மட்டுமல்ல... ஒவ்வொரு மாநில மக்களும் தங்களது கலாச்சார அடையாளத்தை இழக்கும் வகையிலும் அவற்றை அழிக்கும் வகையிலும்தான் ரயில்வே துறை நடந்துகொள்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்தை அழிப்பது மட்டுமல்ல... இந்தியாவின்ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியும் கூட!
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி, மதுரை - போடி நாயக்கனூர், சென்னை பீச் - எழும்பூர் இடையிலான நான்காவது லைன் போன்ற திட்டங்களுக்கு மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்திலும் தமிழகத்திற்கு மிகக்குறைந்த அளவாக 303 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது போதுமானதல்ல. அதேபோல திண்டிவனம் - செஞ்சி- திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோட -பழனி, சென்னை- கடலூர், மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக் கோட்டை- ஆவடி, மொரப்பூர் - தர்மபுரி, காட்பாடி - விழுப்புரம் இரட்டை ரயில்பாதை திட்டம் போன்ற ரயில் பாதை திட்டங்கள் மீது இந்த ஒன்றிய அரசு போதிய கவனம் செலுத்தி, போதுமான நிதியையும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
1600 கோடி ரூபாய்திட்ட மதிப்புள்ள சேலம் -கரூர் -திண்டுக்கல் இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கு இந்த ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது நியாயமல்ல. அதேபோல 650 கோடி ரூபாய் நிதிதேவைப்படும் ஈரோடு - கரூர் இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கு ஒரு கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பதும் சரியல்ல. மதுரை - போடி நாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டம், வாஞ்சி மணியாச்சி - நாகர்கோயில், திரு வனந்தபுரம் - கன்னியா குமரி இரட்டை ரயில்பாதை திட்டங்களுக்கும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதி!
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகத்திற்கு இப்படி குறைந்த நிதி ஒதுக்கப்பட்டு வருகிறதுஎன்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறேன். தமிழ்நாட்டில் செயல் படுத்தப்படவுள்ள 11 புதிய ரயில்வே திட்டங்களுக்கு 59 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பத்துதிட்டங்களுக்கு தலா வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி தனது பெருந்தன்மையைக் காட்டியிருக்கிறார் நமது ரயில்வே அமைச்சர்!
2016ம் ஆண்டில் ரயில்வேக்கு என தனி பட்ஜெட் போடத் தொடங்கியது முதலே தமிழ்நாட்டுக்கு இப்படி தான் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தான் தொடங்கிய ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்குக் கூடபோதிய நிதியை ஒதுக்கத் தயங்கும் ரயில்வேத் துறையின் கேலிக்கூத்தான நிலையை நாம் காண்கிறோம். அதுமட்டுமல்ல,ரயில்வே திட்டங்களுக் கெனதமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கேட்கும் நிதியைக் கொடுக்கவும் ரயில்வேத் துறை தயாராக இல்லை.
தமிழ்நாடுக்கு எந்த நிதியையும் ஒதுக்குவதில்லை என்று ரயில்வேதுறை மறைமுகமாக எதுவும் முடிவெடுத்திருக்கிறதா? இதை வெறுப்புஅரசியல் என்று கூறலாமா?இன்னொரு முக்கிய மான விஷயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழகத்தின் டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை -புதுக்கோட்டை இடையில் புதிய ரயில்பாதை அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து, அதற்கென ஆய்வும் செய்யப்பட்டு அதுபற்றிய அறிக்கையும் தாக்கலாகி விட்டது. எப்போது தெரியுமா?
நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு சற்று காலம் முன்பாக! சில ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட மீண்டும்கள ஆய்வு நடந்தது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ரயில்பாதை திட்டம் நிறைவேறினால், ராமேஸ்வரம் - சென்னைரயில் பாதையில் சுமார் 60கி.மீ. தூரமும், கணிசமானபயண நேரமும் குறைவதுடன், எரிபொருள் செலவும் கணிசமாகக் குறையும். ராமேஸ்வரத்தைச் சேர்ந்தபயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையுமான இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் ரயில்வேதேவைகள்!
தமிழ்நாட்டின்ரயில்வேதேவைகள் இன்னும்கூட நிறைய இருக்கின்றன. ஆனால் நேரமின்மை காரணமாக அவற்றை விரிவாக எடுத்துச்சொல்ல முடியவில்லை. ரயில்வே அமைச்சரிடம் அதுபற்றிதனியாக கோரிக்கை மனுவை அளிக்கிறேன். நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் அத்திட்டங்கள் பற்றி ரயில்வேதுறையின் பாராமுகத்தைக் கண்டு தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
மிகப்பெரும் அநீதி தங்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை அடைகிறார்கள். வடக்கு மட்டுமல்ல... நாங்களும் உங்கள் நிர்வா கத்தின் கீழுள்ள மக்கள் தான்! நாங்களும் மக்களால், மக்கள் பிரதிநிதிகளால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள்தான். மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள்தான். இந்த விஷயத்தில் உங்களிடம் இருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ரயில்வே அமைச்சருக்கும் ஒன்றியஅரசுக்கும் நினைவுபடுத்த விரும்பு கிறேன்.
அதிகாரம் என்பது நிரந்தரமல்ல!
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உங்களுக்குப் போதுமான எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இருப்பதாலேயே, உங்களுக்கு வாக்களிக்காத மக்கள் மற்றும் மாநிலங்கள் மீது வெறுப்பைக் காட்டுவதற்கு உங் களுக்கு அதிகாரமில்லை. அதிகாரம் என்பது நிரந்தரமானதல்ல. வினை விதைத்தால் வினையை அறுப்பீர்கள்.
தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாருங்கள். அவர் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டு மல்ல... ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களுக்காகவும் உழைக்கிறார். திட்டங்களைத் தீட்டுகிறார். கூட்டாட்சித் தத்துவம் காப்பற்றப்பட வேண்டுமானால் மாநில சுயாட்சியும், மாநிலங்களின் தனித்த கலாச்சார அடையாளங்களும் மதிக்கப்பட வேண்டும். மக்களின் தேவையும் உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் இந்தத் துறையை நிர்வகிக்கிறோம் என்பதை ரயில்வே அமைச்சர் உணரவேண்டும். ஒன்றிய அரசின் வருமானத்தில் அதிகப் பங்களிப் பைச் செய்யும் இரண்டா வது பெரியமாநிலம் என்ற இடத்தைப்பெற்றுள்ளதமிழ்நாடு, இன்னும் நிறைய திட்டங்களை, நிதியைப் பெற தகுதியான மாநிலமாக இருக்கிறதுஎன்பதை இந்த அவையில் அழுத்தமாகப் பதிவு செய்து அமைகிறேன், இவ்வாறு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!