Tamilnadu
“மக்களைக் காக்க ⇢ ‘நிதிநிலை அறிக்கை’ - மண்ணைக் காக்க ⇢ ‘வேளாண் அறிக்கை’” : முரசொலி தலையங்கம் புகழாரம் !
*தமிழகத்தின் நிகரச் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது
* அனைத்து வேளாண் திட்டங்களையும் ஒருங்கிணைப்பது
* ஒட்டுமொத்த கிராமங்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு நடவடிக்கை எடுப்பது
* மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது
* மாற்றுப்பயிர்களை அறிமுகம் செய்வது
* பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளைக் காப்பது
* விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்டுவது
* வேளாண் சார்ந்த பணிகளை ஊக்குவிப்பது
* இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது
* தகவல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவது
* பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது
* தோட்டக்கலைப் பயிர்களில் மரபுசார் இரகங்களை அறிமுகம் செய்வது
* வேளாண்மைப் பணிகளை இயந்திர மயமாக்குதல்
* சூரிய சக்தியைப் பயன்படுத்துவது
* சந்தை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்
* வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றுதல் - ஆகிய நோக்கம் கொண்டதாக வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு சிற்றூர் விளைச்சலும் செழிக்கும். கிராமப்புற வீடுகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகளும், தோட்டக்கலைச் செடிகளும் வழங்க இருக்கிறார்கள். இதேபோல் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் மூலமாக இடுபொருள்களும், விதைகளும் மானியத்தில் வழங்க இருக்கிறார்கள். பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக மானியங்கள் தரப்படுகின்றன. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சிறுதானிய இயக்கம் தொடங்க இருக்கிறார்கள்.
சிறுதானியத் திருவிழா நடக்க இருக்கிறது. நெல், தென்னை, பருத்தி, பயறுகள், எண்ணெய் வித்துகள், கரும்பு, பழங்கள், காய்கறிகள், தேனீக்கள், மலர்கள், கிழங்கு வகைகள், பூண்டு, தக்காளி, பனை, மூலிகைச் செடிகள் என அனைத்தையும் கவனித்து வளர்க்கும் திட்டங்கள் இந்த அறிக்கையில் இருக்கிறது.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உரிய தீர்வுகளைக் காண்பதற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக விவசாயிகள் பிரச்சினையை தொகுக்கப்பட்டும் வருகிறது. இந்த அறிக்கையில் மிக முக்கியமானது கால நிலை மாற்றம் குறித்த பார்வையாகும். புவி வெப்பமடைதல்தான் இந்த மானுடத்தின் மாபெரும் சவாலான பிரச்சினை என்பதை முதலமைச்சர் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். அதனை மனதில் வைத்து இந்த அறிக்கையில் சில முக்கிய மான கருத்துக்கள் உள்ளன. காலநிலை மாற்றம் என்பது பொருளாதார வளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை பன்னாட்டு அமைப்புகள் ஆய்வுகள் செய்து வருகின்றன. பருவ காலங்கள் மாறி விட்டது.
குறிப்பிட்ட காலத்தில் மழை, குறிப்பிட்ட காலத்தில் வெயில் என்பது மறைந்து மாறி மாறி வருகிறது. அதிகப்படியான வெயிலும், அளவுக்கு அதிகமான மழையும் பெய்வதைப் பார்க்கிறோம். இவை அனைத்தையும் ஒரு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு அதனை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறது. பருவமாற்றத்தால் வேளாண்மை, வனங்கள், மீன் வளம், எரிசக்தி ஆகிய துறைகள் பாதிக்கப்படும் என்று கணிக்கிறார்கள்.
“கால நிலை மாற்றங்களைத் தாங்கி வளரக் கூடிய பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக மாற்றுப்பயிர் சாகுபடி முறையை அரசு ஊக்குவிக்க இருக்கிறது” என்று இந்த அறிக்கை சொல்கிறது. இளைஞர்களை வேளாண் தொழிலை நோக்கி ஈர்க்கிறது இந்த அறிக்கை. அவர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்க முயற்சிகள் மேற் கொள்ளஇருக்கிறார்கள். வேளாண்மையை மேலாண்மை ஆக்கும் அறிக்கையாக இந்த அறிக்கை உள்ளது.
“90 பக்க அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், இந்த நாட்டில் வாழும் லட்சக்கணக்கான உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவும், அவர்களது நிலத்தை முன்னேற்று வதாகவும், வளத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையப் போகிறது. இதன் மூலமாக விளைச்சல் அதிகமாகி, மாநிலத்தின் உற்பத்தி அதிகம் ஆகவே போகிறது. பசுமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, விவசாயியின் மனத்திலும் விளையப் போகிறது” என்று வரவேற்றுள்ள முதலமைச்சர் அவர்கள், “வான்புகழ் கொண்ட வள்ளுவரின் கனவை நிறைவேற்றும் வகை யிலும், வானத்தை நம்பி வாழும் உழவர் பெரு மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது. மண்ணையும் காப்போம். மக்களையும் காப்போம். மாநிலத்தை மட்டுமல்ல, இந்த நானிலத்தையும் காப்போம்!” என்று குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் மூலமாக மக்களைக் காக்கும் தி.மு.க. அரசு, இந்த வேளாண் அறிக்கையின் மூலமாக மண்ணைக் காக்கிறது! மண்ணையும் மக்களையும் காக்கும் முதலமைச்சரை இந்த நாடு பெற்றுள்ளது!
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!