Tamilnadu

“இந்த அவையில் இப்போது கலைஞர் மட்டும் இருந்திருந்தால்..” : சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2022 - 2023ம் ஆண்டுக்காண நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று நிதிநிலை அறிக்கை தொடர்பாக, அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரையாற்றினார்கள்.

பின்னர் அவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் உள்ள தொழிலதிபர்களை ஈர்க்க தானாக முன்வந்தும், ஆயிரம் வேலைகள் இருக்கும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கடல்கடந்து துபாய் செல்கிறார்.

கடல்கடந்து இன்றைய தினம் துபாய்க்கு செல்லும் முதலமைச்சர் பலநாட்டு சர்வதேசர்கள் கூடுகின்ற உலக கண்காட்சியில் ரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார் என்றால், அது உலகச் செய்தி ஆகும். அதனால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதலீட்டாளர்களையும் தமிழ்நாடு ஈர்க்கும்.

சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை முன்னேற்றம் என எல்லா துறையிலும் இந்த 10 மாத காலத்தில் 100 ஆண்டுகால அனுபவத்தோடு செய்வதைப்போல செய்திருக்கிறார். அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.

இந்த அவையில், இப்போது தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் முதல்வரின் பணியை பார்த்து கண்ணீர் வடித்திருப்பார். மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு அந்த கண்ணீரை அவர் துணியால் துடைக்கும் காட்சியை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

இங்குள்ள அனைவரின் சார்பிலும் முதல்வரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நீங்கள் இந்தியா மட்டுமல்ல உலகப் புகழ் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ” எனத் தெரிவித்துள்ளார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Also Read: துபாய் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துபாய், அபுதாபியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?