Tamilnadu
“அது வேற வாய்.. இது வேற..” - ஜெ.மரணம் குறித்து மாற்றி மாற்றிப் பேசும் OPS - பல்டி அடித்தது ஏன்?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த சதியும் நடக்கவில்லை என திட்டவட்டமாகப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகச் சொல்லி எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9வது முறையாக சம்மன் அனுப்பியதையொட்டி நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
ஆப்போது அவரிடம் எழுப்பப்பட்ட 78 கேள்விகளில் பெரும்பாலும் தனக்கு எதுவுமே தெரியாது என்றே ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்திருந்தார். அப்போது ஏன் விசாரணை ஆணையம் அமைக்கச் சொல்லி கேட்டீர்கள் என ஆணையம் தரப்பில் கேள்வி எழுப்பியபோது பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை.
அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. சிகிச்சையின்போது ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என எனக்கு தெரியாது.
டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது. ஆனால் மாலை 5.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்றைய விசாரணையின் போது மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை எனக் கூறியிருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்றைய விசாரணையின்போது அவர் இறப்பதற்கு முன்பு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவை நான் உட்பட 3 அமைச்சர்கள் பார்த்ததாக கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை எனவும், ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டை களையவேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்கவேண்டும் என்று கேட்டதாகவும், ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால்தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த சதியும் நடக்கவில்லை என திட்டவட்டமாகப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எக்மோ சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளுக்கும் அப்போது மூத்த அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரிடம் ஆலோசித்து, கையெழுத்து வாங்கியே 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை வழங்கியுள்ளதற்கான ஆவணங்கள் உள்ளது.
பொதுவாக ஒரு மரணம் ஏற்பட்டால் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு வைப்பார்கள், அது வேறு விஷயம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கத்தில் அரசியல் காரணங்களை முன்வைத்தே குற்றம்சாட்டினார். 2011ஆம் ஆண்டு அ.தி.மு.கவிலிருந்து விலக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டபோது எப்போதும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று சசிகலா தரப்பில் கடிதம் வழங்கப்பட்டதாக ஓபிஎஸ் தொடர்ந்து குற்றம் சாட்டினார், இதுதான் அவரது அப்போதைய நிலைப்பாடு.
ஆர்.கே.நகரில் முதலில் தேர்தல் நடைபெற்றபோது ஒரு சவப்பெட்டியிலே ஜெயலலிதா போன்ற உருவபொம்மையை செய்துவைத்து ஓ.பி.எஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி என அப்போது ஓ.பி.எஸ் கூறினார்.
ஆனால், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு மூன்று மாதங்கள் முதல்வராக இருந்தபோது ஒரு இடத்திலும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓ.பி.எஸ் கூறவில்லை. ஆனால், இப்போது ஓ.பி.எஸ் முழுமையாக மாற்றிப் பேசுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!