Tamilnadu
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு - தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘தனித் தீர்மானம்’ நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 2022 - 2023ம் ஆண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன் இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முன்மொழிந்த தீர்மானம் பின்வருமாறு :
காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும், தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
ஒன்றிய அரசு கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்விதமான தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்த இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
காவிரி நதிநீர்ப் பிரச்சனை ஒரு நீண்டகால பிரச்சனையாகும். இதற்கு தீர்வாக உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சனையாகும். ஆதலால் காநாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்ற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசிற்கு அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.
மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 18.05.2018 ஆணையின்படி, அதன் 16.02.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !