Tamilnadu
“எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்ட பட்ஜெட்” : ‘தினத்தந்தி' நாளேடு தலையங்கம் பாராட்டு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முழு முதல் பட்ஜெட் - எதிர்காலத்தை மனதில் வைத்துள்ள பட்ஜெட் என தினத்தந்தி நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது.
தினத்தந்தி நாளேட்டின் (19-03-2022) தலையங்கம் வருமாறு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முழு முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் எதிர்பார்த்தது இல்லையென்றாலும், எதிர்பாராத நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன. இந்த பட்ஜெட்டை பார்க்கும்போது அரசு கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது.
15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி, நிலுவை கடன் தொகை மாநில உற்பத்தி மதிப்பில் இந்த நிதி ஆண்டில் (2022-23) 29.3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். இந்த நிதி ஆண்டில் நிகர கடன் ரூ.90 ஆயிரத்து 116.52 கோடியாக கணிக்கப்பட்டு உள்ளதால் 31.3.2023 அன்று நிலுவை கடன் தொகை ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாகவும், இந்த கடன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.29 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆக நிலுவை கடன் தொகை 15-வது நிதி குழுவின் வரம்புக்குள்ளேயே அடங்குகிறது.
இதுபோல நிதிப்பற்றாக்குறை அதாவது செலவுக்கும், வரவுக்கும் உள்ள வித்தியாசம் வருகிற நிதி ஆண்டில் 3.5 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும். ஆனால் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 3.63 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. எனவே வரவை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கும் முயற்சிகளும் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
இந்த பட்ஜெட்டின் முத்திரை பதிக்கும் அறிவிப்பு என்னவென்றால், அரசு பள்ளிக்கூடங்களில் 6-வது முதல் 12-ம் வகுப்பு வரையில் படித்து பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழில் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படும் என்பதுதான். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 லட்சம் மாணவிகள் பயன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல அரசு பள்ளிக்கூடங்களில் 6-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஊக்குவிக்கும் வகையில் இந்த மாணவர்களின் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்பது மாணவர்களை நன்றாக படிக்க ஊக்குவிக்கும்.
வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்கள், தொழில் தொகுப்புகள், தொழில் குழுமங்கள் தொடங்கும் அறிவிப்பு வரவேற்புக்குரியது. ‘ஸ்டார்ட் அப்’ என்று கூறப்படும் புத்தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ரூ.50 லட்சம் வரை அரசு துறைகளும், நிறுவனங்களும் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு புத்தொழிலை தொடங்க இளைஞர்களை ஊக்கப்படுத்தும்.
இந்த பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெண்களுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்ற ஆட்சியில் விட்டு சென்ற நிதி நெருக்கடி சூழல் காரணமாக இந்த வாக்குறுதியை இந்த அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. பயனாளிகளை கண்டறியும் பணிகள் முழு முனைப்புடன் நடைபெறுகிறது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று வெளிப்படையாகவே பட்ஜெட்டில் சொல்லப்பட்டுவிட்டது.
இது வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்ட பட்ஜெட், எதிர்காலத்தை மனதில் கொண்டு தயாரித்த பட்ஜெட் என்பதில் சந்தேகமே இல்லை. என்றாலும், பட்ஜெட்டில் தெரிவித்தபடி வரும் நிதி ஆண்டு மிகவும் இக்கட்டான, பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பது ஒரு எச்சரிக்கையாகவே தெரிகிறது. மொத்தத்தில் இருப்பதை கொண்டு சிறப்பாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ‘தினத்தந்தி’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!