Tamilnadu
அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட மருத்துவர் சுப்பையா கைது.. மூதாட்டியை மிரட்டியதா சுப்பையா தரப்பு?
மருத்துவர் சுப்பையாவை 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் குற்றவியல் நடுவர் உத்தரவு பிறப்பித்தது.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் மருத்துவர் சுப்பையா சண்முகம் (58). இவர் புற்று நோய் நிபுணர். மேலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கு அதே குடியிருப்பில் வசித்துவரும் வயதான பெண்மணி ஒருவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பெண்மணிக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா சண்முகம் காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான பெண்மணிக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளை கொடுத்துள்ளார். அதில் உச்சபட்சமாக பெண்மணியின் வீட்டில் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண்மணிக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் அந்த பெண்மனிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வந்த உறவினர் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலிஸில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17ஆம் தேதி புகார் அளித்தார்.
சுப்பையா சண்முகம், அண்டைவீட்டுப் பெண்மணி வீட்டில் சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர் சுப்பையா சண்முகம் பெண்மணிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததும், சிறுநீர் கழித்ததும் உண்மை என தெரியவந்தது.
இதனையடுத்து ஆதம்பாக்கம் போலிஸார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொரோனா விதிமுறை மீறல், பொருட்கள் சேதப்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபன், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் வீட்டில் இருந்த டாக்டர் சுப்பையா சண்முகத்தை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் குற்றவியல் நடுவர் வைஷ்ணவி முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது சுப்பையா தரப்பில் வக்கீல் பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். சுப்பையா மீதான வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட வயதான பெண் சமரசம் செய்துவிட்டார். அவரும் வந்துள்ளார் என்றார்.
பின்னர் அந்தப் பெண்மணி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், மருத்துவர் சிறுநீர் கழித்தது உண்மை எனக் கூறியுள்ளார். மேலும், தற்போது மருத்துவர் தன்னிடம் எந்த விதமான பிரச்சனையில் ஈடுபடவில்லை என்பதால் சமரசமாக செல்வதாக தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட்டு, பொருட்கள் தேசப்படுத்தப்பட்ட பிரிவுக்கு செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் வருகின்ற 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட மருத்துவர் சண்முகம் சுப்பையாவை ஆதம்பாக்கம் போலிஸார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, மருத்துவர் சண்முகம் சுப்பையா தரப்பினர் மூதாட்டியை குடியிருப்பிலிருந்து மிரட்டி காரில் ஏற்றி நீதிமன்ற வளாகம் அழைத்து வந்ததும், சண்முகம் சுப்பையா எவ்வித பிரச்சையிலும் ஈடுப்படவில்லை என மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் மூதாட்டியிடம் கூறி அழைத்து வந்ததும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!