Tamilnadu

பார்வையற்ற ஆசிரியரை தினமும் பத்திரமாக அனுப்பி வைக்கும் மாணவர்கள் : காண்போரை நெகிழ்ச்சி ஆக்கும் சம்பவம்!

கள்ளக்குறிச்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அய்யாவு என்பவர் பாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2018ம் ஆண்டுமுதல் தற்காலிக ஆசிரியராக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இசை குறித்த பாடங்களை எடுத்து வருகிறார்.

ஆசிரியர் அய்யாவு தினமும் மடம் கிராமத்திலிருந்து பள்ளிக்கு பேருந்தில் வந்து செல்கிறார். பள்ளி முடிந்தவுடன் அப்பள்ளி மாணவர்கள் அவரை பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவருக்கான பேருந்து வரும் வரை காத்திருந்து,அவரை பேருந்தில் ஏற்றி வழி அனுப்புகின்றனர்.

இது ஏதோ ஒருநாள் நடக்கக் கூடியது அல்ல. தினமும் பாடம் முடித்தவுடன் ஆசிரியர் அய்யாவுவை மாணவர்கள் பேருந்து ஏற்றி வழி அனுப்பு வருகின்றனர். மாணவர்களின் இந்த மனிதநேய செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாணவர்கள் ஆசிரியரைப் பேருந்து ஏற்றி வழி அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த காவல்துறை அதிகாரி விஜயகுமார், மாணவர்கள் இந்த உலகத்தை மிகவும் அழகாகவும், வாழ சிறந்த இடமாகவும் மாற்றியுள்ளனர் என மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Also Read: எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?