Tamilnadu

நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த SI தலைமையிலான தனிப்படை - யார் இந்த இசக்கி ராஜா?

உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். அவர்தான் இன்று காவல்துறைக்கு தலைவலியாக இருந்து வந்த நீராவி முருகனைப் பிடிக்க முயன்றபோது, அவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு மருத்துவர் வீட்டில் 240 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நீராவி முருகனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை இசக்கி ராஜா தலைமையிலான தனிப்படையினர் கடம்போடுவாழ்வு அருகே இனோவா காரில் பதுங்கி இருந்த நீராவி முருகனை சுற்றி வளைத்தனர்.

அப்போது, உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா, நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது இசக்கி ராஜாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார் நீராவி முருகன். இதனால் அவரை துப்பாக்கியால் சுட்டார் இசக்கி ராஜா.

என்கவுன்ட்டர் செய்வதற்கு முன்னர் நீராவி முருகன் தாக்கியதில் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா போலிஸார் சத்யராஜ், மணி உள்ளிட்ட 4 பேர் லேசான காயமடைந்தனர்.

நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர்.

அப்போது கோவில்பட்டி பகுதியில் ரவுடிகளுக்கு இசக்கிராஜா சிம்மசொப்பனமாக இருந்து வந்தார். அப்பகுதியில் ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி நேரடியாக ரவுடிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்து வந்தார்.

இதுதொடர்பான ஆடியோக்கள் அப்போது வைரலாகின. இதன் மூலம் அப்பகுதி இளைஞர்கள் மட்டுமல்லாது பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றிய இசக்கி ராஜா சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவில் இடம்பெற்றார்.

அவர்தான் இன்று காவல்துறைக்கு தலைவலியாக இருந்து வந்த நீராவி முருகனைப் பிடிக்க முயன்றபோது, அவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

Also Read: வழிப்பறியில் துவங்கிய வாழ்க்கை என்கவுன்டரில் முடிந்தது.. யார் இந்த நீராவி முருகன்?