Tamilnadu
”திராவிடத்தின் நிலைத்த புகழுக்கு சான்று சென்னை ’அண்ணா மேம்பாலம்’ ”- Times of India ஏடு சிறப்புக் கட்டுரை!
“Project Aimed At Restoring Flyover And use Space Beneath it To Create Landmarks: Anna Flyover to turn a standing testimony of Dravidianism” - எனும் தலைப்பில், ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ், தனது, 12-3-2022 அன்றைய பதிப்பில் சிறப்புக் கட்டுரையொன்றினை வெளியிட்டது.
ரூ.9 கோடியில் சென்னை - அண்ணா மேம்பாலம் கழக அரசில் புதுப்பிக்கப்பட உள்ளது குறித்தும்- அத்திட்டத்தின் பல்வேறு சிறப்புக் கூறுகள் குறித்தும் ஏராளமான செய்திகளைத் திரட்டி அக்கட்டுரையினை, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் சிறப்புச் செய்தியாளர் ஜெ.சண்முகசுந்தரம் தீட்டியிருந்தார்.
‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வழங்கிய அச்செய்தித் தொகுப்பின் தமிழாக்கம் வருமாறு:-
ஐம்பது ஆண்டுகளாக சென்னையின் சின்னமாக விளங்கும் அண்ணா மேம்பாலத்தை; திராவிட இயக்கம் ஆதரிக்கும் கொள்கைகள் அனைத்திற்குமான நிலைத்த புகழ்ச் சான்றாக ஆக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் தோற்றப் பொலிவையே மாற்றியமைத்திட ரூ.9 கோடியில் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அதில் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், அதனுடைய முதலாவது முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்பெற்ற கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மாநிலத்தின் பண்பாடு, இறையாண்மை, சுயாட்சி, முன்னேற்றம் ஆகியவற்றைக் குறித்திடும் மேற்கோள் வாசகங்களை 32 பித்தளை வில்லை (தகடு)களில் பொறித்துப் பதித்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்லவர் கால சிற்பக்கலை!
கதீட்ரல் சாலை, அண்ணா மேம்பாலச் சந்திப்பு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகியவற்றின் நடுவில் போக்குவரத்து முக்கோணத்தீவு போல் அமைந்துள்ள அண்ணா மேம்பாலச் சந்திப்பில்; பல்லவர் கால சிற்பக்கலைப் பாங்கில் செதுக்கப்பட்ட ஆறடி உயர சிங்க வடிவச் சிற்பம் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டமைப்பு (தமிழ்) இனப் பார்வையழகைப் பிரதிபலித்திடும் வகையில் உள்ளேயும் வெளியேயும் செல்லும் எட்டு வழிகளில் கல் தூண்கள் நிறுவப்பெறும்.
தற்பொழுது, இந்த மேம்பாலம் அடிக்கல் நாட்டப்பட்ட விவரங்கள் பொது மக்கள் பார்வையில் படாத வண்ணம் மறைக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டப்பட்டமை, பாலத்தை புத்துருவாக்கம் செய்தமை ஆகிய செய்திகளடங்கிய புதிய பித்தளை வில்லைத் தகடுகளுக்கிடையில் உயரத்தில் சுடரொளி வடிவம் கொண்டு கலைப்படைப்பு அமைக்கப் பெறும். "மேம்பாலத்தைப் புத்துருவாக்கம் செய்து அழகுபடுத்தும் பணியானது, 1971ஆம் ஆண்டு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் ஐம்பதாவது ஆண்டினைக் குறித்திடும் வகையில் அமைந்திடும்" என நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவர் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1971ஆம் ஆண்டு இப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூ.70 லட்சம் செலவில் மாநிலத்தில் கட்டப்பட்ட முதலாவது மேம்பாலம் இதுவேயாகும். 1973 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு இது திறந்து விடப்பட்டது. இந்த மேம்பாலம் ஓர் வழிகாட்டும் அடையாளக் குறியீடாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கதீட்ரல் சாலை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலை ஆகியவற்றின் சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை செங்குத்தாக நின்று தீர்த்து வைத்தது இந்த 800 மீட்டர் நீள மேம்பாலம்.
இந்த மேம்பாலத்திற்கு, முன்பு இருந்த யானை நிற சாம்பல் வண்ணமே பூசப்படும். மேம்பாலத்துக்கு அருகிலுள்ள செம்மொழிப் பூங்காவில் உள்ள திறந்தவெளி விளையாட்டுத்திடல் புதுப்பிக்கப்பட்டு, அங்கு வெவ்வேறு வடிவக்கல்லில் செதுக்கப்பட்ட தமிழ் எழுத்துத் தூண்கள் நிறுவப்படும். பூங்காப் பகுதிக்குள் தற்பொழுது இடம் பெற்றிருக்கும் தந்தை பெரியாரின் திருவுருவச்சிலை, மக்கள் பார்வைக்கு நன்கு தெரியும் வகையில் ஐந்தடி உயர்த்தி அமைக்கப்படும். சங்க காலத்தில் தொடங்கி தொடர்ந்து நிலவி வரும் தமிழ் நாகரிகத்தின் திருப்புமுனைக் கட்டங்களை விளக்கிடும் வகையில் இப்பணியினைச் செய்திட இந்தக் கருத்திற்கு உருவம் கொடுத்திட, புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது அழைக்கப்பட்டுள்ளார்.
"கலைப் படைப்புகளும், சிற்பங்களும் பண்டைய மரபுகளையும், அண்மைக்காலக் கலையழகினையும் இணைத்து உருவாக்கப்படும். சிங்க வடிவச் சிற்பமானது; பல்லவர் காலச் சிற்பக் கலைப் பாங்கில் அமைக்கப்படும்! அதே நேரத்தில் கருத்துக்கலை வடிவமானது தென்னிந்திய வரலாற்றையும், அதனுடைய மாபெரும் சமூக - "பொருளாதார வளர்ச்சியையும் கவர்ந்து கொள்ளும் வகையில் பயன்படுத்தப்படும்" என டிராட்ஸ்கி மருது குறிப்பிடுகிறார்.
"இப்போதைக்கு, மேம்பாலத்தைத் தாங்கி நிற்கும் 80 தூண்களும் சுவர்களால் மூடப்பட்டு, கிடங்குகளாக மாநில நெடுஞ்சாலைத் துறையால் மாற்றப்பட்டுள்ளன" என ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் கூறினார். "நாங்கள் இந்த மேம்பாலத்தின் பழைய புகழை, பெருமையை மீட்டெடுத்து, அதனடியிலுள்ள இடப்பரப்பினை திராவிட நாகரிகத்தை விளக்கமாகத் தெரியச்செய்து, சிற்பங்கள், வரைவோவியங்கள் வாயிலாக திராவிட இயக்க அரசியல் சாதனைகளை புத்துருவாக்கம் செய்திட விரும்புகிறோம். இங்குள்ள தூண்களில் அண்ணாவின் பொன்மொழிகள் செதுக்கப்படும்" என்றார் அவர்.
இத்திட்டத்திற்கென ரூ.9 கோடியை அரசு ஏற்கனவே அனுமதித்துள்ளது. இப்பணி மாநில நெடுஞ்சாலைத்துறையால் நிறைவேற்றப்படும். பணிகள் தொடங்கியதிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் செய்து முடிக்கப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக; விசா பெறுவதற்காக அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரில் மழையிலும், வெயிலிலும் வரிசையில் நின்று காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், முதியோர் அமருவதற்கான இருக்கை வசதிகள் அமைத்துத் தரப்படும். காத்திருப்போர்க்கான இருக்கை வசதிகள்; எங்கள் தலைவர் அண்ணா அவர்கள் எங்களுக்குக் கற்பித்தவாறு கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் அமர்ந்திடும் வகையில் அமைக்கப்படும்" என்றார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்.
நன்றி - The Times of India
தமிழாக்கம் - முரசொலி
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!