Tamilnadu

"ஜெயில்ல என்ன சோஃபாவும், ஏசியுமா கொடுப்பாங்க?” : ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்று வரும் 24வது மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “24வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 1.33 கோடி இரண்டாம் தவணை செலுத்திகொள்ள வேண்டியவர்களை இலக்காக வைத்து மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

அரசின் சார்பில் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பூஜ்ஜியத்தை நோக்கி வந்தாலும் ஓரிரு மாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

மேலும், கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலின்போது நரேஷ் என்பவரை அரைநிர்வாணப்படுத்தி அ.தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் தனக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ தவறு செய்பவர்களுக்கு சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்? குற்றம் செய்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்படுகிறது. சந்தேகம் இருந்தால் ஜெயக்குமாருக்கு தெரிந்தவர்கள் இரண்டு பேரை சிறைக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்கச் சொல்லுங்கள்” எனப் பதிலடி கொடுத்தார்.

Also Read: “உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன்.. இதோ உங்களுக்கு ஒரு கோரிக்கை..” : முதல்வரின் அசத்தல் பேச்சு!