Tamilnadu

இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்.. நண்பர்கள் இருவர் கைது - நடந்தது என்ன?

காரியாபட்டியில் இளைஞர் இறந்துகிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் முனீஸ்வரன் என்ற அனுமான் (20) என்பவர் இறந்து கிடப்பதாக காரியாபட்டி போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார், முனீஸ்வரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்த டாக்டர், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், சாவில் சந்தேகம் உள்ளதாகவும் அறிக்கை கொடுத்தார்.

அதன்பேரில் காரியாபட்டி காவல் ஆய்வாளர் மூக்கன், உதவி ஆய்வாளர்கள் அசோக் குமார், ஆனந்த ஜோதி, உள்ளிட்ட போலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்த கோழி பாபு (42), அவரது அக்காள் மகன் அருண் பாண்டிக்குமார் (26) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், முனீஸ்வரனும், கோழி பாபுவும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி இருவரும் மது குடித்துக் கொண்டிருக்கும்போது அருண்பாண்டிக்குமாரும் அங்கு வந்துள்ளார்.

அப்போது கோழி பாபுவிடம், உன் மனைவி மற்றும் குடும்பத்தினரை முனீசுவரன் தவறாக பேசிவருகிறான். அவனுடன் சேர்ந்து ஏன் மது குடிக்கிறாய், என கேட்டு அருண்பாண்டிக்குமார் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் சேர்ந்து முனீசுவரனை கட்டையாலும், மண்வெட்டியாலும் அடித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவரது உடலில் இருந்த ரத்தத்தை கழுவிவிட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை வீட்டிற்கு வெளியில் படுக்க வைத்துவிட்டு கோழிபாபுவும், அருண்பாண்டிகுமாரும் அங்கிருந்து தப்பி ஓடியதும், அதன்பின்னர் முனீசுவரன் இறந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காரியாபட்டி போலிஸார் வழக்குப்பதிவு செய்து கோழி பாபுவையும், அருண் பாண்டிக்குமாரையும் கைது செய்தனர்.

Also Read: தாக்குதலில் பலியான ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள்... கொத்துக்கொத்தாக புதைக்கப்படும் கோரக் காட்சி! #Viral