Tamilnadu

3 ஆயுள் தண்டனை முடியும் வரை யுவராஜூக்கு ஜாமீன் கிடைக்காது: கோகுல்ராஜ் வழக்கு குறித்து சொல்லும் வழக்கறிஞர்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் திட்டமிட்டு கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருமாறு:

1.யுவராஜ் ( A1)- U/s மூன்று ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை, 2.அருண் (A2) மூன்று ஆயுள் சிறை, 3.குமார் (A3) மூன்று ஆயுள் சிறை, 4.சதீஸ்குமார் (A8) 2 ஆயுள் சிறை, 5.ரகு (A9) 2 ஆயுள் சிறை, 6.ரஞ்சித் (A10) 2 ஆயுள் சிறை, 7.செல்வராஜ் (A11) 2 ஆயுள் சிறை, 8.சந்திரசேகரன் (A12) ஆயுள் சிறை, 9.பிரபு (A13) ஆயுள் சிறை +5 ஆண்டு கடுங்காவல் தண்டனை + ரூ. 5 ஆயிரம் அபராதம், 10.கிரிதர் (A14) ஆயுள் சிறை + 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை + ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத் தரப்பி ஆஜரான ப.பா.மோகன் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அரசுத் தரப்பிலும் இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என வாதிட்டோம். இருப்பினும் யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், பலருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுஉள்ளது. இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தில் நடமாடினால் தொடர்ந்து குற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத் தண்டனையால் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர முடியாது. மேலும், தண்டனைக் குறைப்புச் சலுகையும் பெற முடியாது.

கண்ணகி நீதி கேட்டுப் போராடிய மதுரையில் பட்டியல் இன இளைஞர் கொலைக்கு குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சமூகநீதிப் போராட்டம். இதற்காக என்னுடன் சேர்ந்து போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: யுவராஜுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... மற்ற குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் என்ன?