Tamilnadu

'Learn While Earn' : பிற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய திட்டம் - செயின்ட் கோபைன் நிறுவனத்தில் முதல்வர்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் உள்ள செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.500 கோடி மதிப்பிலான பசுமை பூங்கா, மிதவை கண்ணாடி, ஜன்னல் பிரிவு என 3 திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் பார்வையிட்டது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

அதில், "திருப்பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றை இன்று தொடங்கி வைத்தேன்.

1998-ஆம் ஆண்டு கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட செயிண்ட் கோபைன் தொழில் வளாகத்தை இன்று பார்வையிட்ட வேளையில், துணை முதலமைச்சராக இருந்தபோது இங்கு வந்து சென்றது நினைவுக்கு வந்தது.

தமிழ்நாட்டின் ஒரே இடத்தில் மிக அதிகமாக முதலீடு செய்துள்ள நிறுவனம் செயிண்ட் கோபைன்தான் என்பது பெருமைக்குரியது. பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் இந்நிறுவனத்தில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இங்குப் பணிபுரிவோர் 'Learn While Earn' என்ற முன்னெடுப்பின் வழியாக டிப்ளமோ படிப்பு வரை படித்து இங்கேயே பணிபுரிகின்றனர். அவர்களோடு கலந்துரையாடினேன். இது பிற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய நல்லதொரு திட்டம்!

நமது தொழில்நுட்பத்தாலான ரோபோடிக் சாதனங்களைக் கையாளுதல், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தொழிற்சாலையை இயக்குதல், சமூகப் பொறுப்புணர்வோடு பல்லாயிரம் மரங்களை நட்டுப் பராமரித்தல் என செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன.

இதுபோன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரவேண்டுமென முதலமைச்சர் என்ற முறையில் அழைப்பு விடுக்கிறேன்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “நீட் எனும் தடைக்கல்லும் தூக்கியெறியப்படும்!” : கல்விக் கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!