Tamilnadu
“ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது” : கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் துரைமுருகன்!
“மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் 18.5.2018 அன்று அளித்த ஆணையின்படியும், ஒன்றிய அரசு 1.6.2018 அன்று வெளியிட்ட அதன் அரசிதழிலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது உச்சநீதி மன்றத்தின் ஆணையை செயல்படுத்தத்தான் எனக் கூறியுள்ளது. ஆகையால், அதற்கு இடையூறு விளைவிக்கும் விதம் எந்தப் பணியையும் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது.
இந்த கருத்தை ஏற்கனவே 11.2.2022 அன்று நடந்த 15வது ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுப்பினர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடான கர்நாடகாவின் மேகதாது அணைக்கட்டும் பிரச்சனை பற்றிய பொருள் மேலாண்மை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற தமிழ்நாட்டின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.
தமிழகத்திற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத் தர வேண்டும் என்று உச்சநீதி மன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது. இதைச் செயல்படுத்துவது தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியப் பங்கு. மேலும், காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் இறுதி தீர்ப்பின்படியும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் படியும், எந்த ஒரு புதிய அணையைக் கட்டுவதற்கும் கர்நாடக அரசிற்கு அனுமதி கிடையாது.
மேகதாதுவில் ஒரு அணைக் கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரைத் தடுப்பதற்காகவே என்று கருத வேண்டியுள்ளது. இது தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும். மேலும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது தேசிய சொத்து என்று கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிற நீரை இடைமறித்து மேகதாதுவில் அணைக் கட்டுவோம் என்று ஆட்சியில் உள்ளவர்கள் சொல்வது நடுவர் மன்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்படுவதாகும்.
சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த குறிப்பில், தமிழ்நாடு அரசின் இசைவில்லாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க சாத்தியக்கூறு இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
மேகதாது அணைக் கட்டும் பிரச்சனை குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள போதே, சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறையின் அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் ஆகிய எதையுமே பெறாமல் கர்நாடக அரசு தனது 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணைகட்டும் திட்டத்திற்காக ரூ.1,000/- கோடி நிதி ஓதிக்கீடு செய்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.
இத்திட்டத்திற்காக ரூ.1,000/- கோடி அல்ல ரூ.5,000/- கோடியை கர்நாடக அரசு ஒதுக்கினாலும், ஒரு செங்கல்லை கூட வைக்க தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்குண்டான சட்டப்படியான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.
கர்நாடக அரசின் ரூ.1,000/- கோடி அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் பேரார்வம் கொண்டு இது குறித்து விவாதிக்க சர்வக்கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானது தான். ஏற்கெனவே இது குறித்து சர்வக்கட்சிக் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். ஆகையால், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிப்பதை தடுக்க சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!