Tamilnadu

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தண்டனை அறிவித்த நீதிபதி : ஆயுள் தண்டனை என்றால் எத்தனை ஆண்டுகள்?

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், யுவராஜின் கார் டிரைவர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் மீதமுள்ள 8 குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குமார், சதீஷ், ரகு, ரஞ்சித் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபு, கிரிதருக்கு ஒரு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தண்டனையில் இருந்து யுவராஜ் எந்தவித விலக்கோ, பிணையோ கோர முடியாது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை பெற்றுள்ளதால், அவர் கருணை மனுவே போட முடியாது. மற்றவர்களுக்கு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இரட்டை மற்றும் ஒற்றை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் அவர்கள் அனைவருமே இறுதி வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதுவதற்குமான தண்டனையைக் குறிக்கும். இந்தியாவில், ஆயுள் தண்டனை என்பது இப்போது பெரும்பாலும் தூக்கு தண்டனைக்குப் பதிலாக கொடுக்கப்படுகிறது. அரிதிலும் அரிதான சில குற்றங்களுக்கு மட்டும் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர், அவருக்கு அரசாங்கம் ஏதாவது தண்டனை குறைப்பு அளித்தால் அன்றி, அவர் தனது ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். 14 வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார் என்பதற்காக அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.

ஆயுள் தண்டனை தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மதன் பி.லோகூர் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ஆயுள் தண்டனை கைதி தனது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Also Read: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு : யுவராஜூக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. பின்னணி என்ன?