Tamilnadu

“கூட்டணி அறத்தை பாதுகாக்கும் முதல்வரின் செயல் நம்பிக்கையூட்டுகிறது” : தோழமைக் கட்சித் தலைவர்கள் வரவேற்பு!

உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலின்போது தி.மு.க தலைமைக் கழக அறிவிப்பை மீறி சில இடங்களில் தி.மு.கவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, இன்று தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு, தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ, அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கையை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்று, கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “முதல்வரின் அறிக்கை நம்பிக்கையைத் தருகிறது. கூட்டணி அறத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்துக்கு நன்றி. தி.மு.கவுக்கு எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “கூட்டணி தர்மத்தை காத்த முதல்வரின் செயலை வரவேற்கிறேன். முதல்வரின் முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தோழமை உணர்வு எக்காலத்திலும் உருக்குலைந்துவிடக்கூடாது”: தி.மு.க-வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!