Tamilnadu

“பொறுப்பை விட்டு விலகிவிட்டு என்னை வந்து பாருங்க” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

“மறைமுக தேர்தலில் தி.மு.க தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகிவிட்டு என்னை நேரில் வந்து சந்தியுங்கள்." என முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

முன்னதாக, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டன.

பின்னர், தி.மு.க சார்பில் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று நடந்த மறைமுக தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர்.

சில இடங்களில் தி.மு.க தலைமைக் கழகத்தின் அறிவிப்பை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடங்களில் தி.மு.க உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “மறைமுக தேர்தலில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகவேண்டும். உடனடியாக பொறுப்பை விட்டு விலகிவிட்டு என்னை நேரில் வந்து சந்தியுங்கள்.” என அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: 20 மாநகராட்சி துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு.. 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி!