Tamilnadu
“ஸ்டாலினின் இந்த வெற்றிப்பயணம்; வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய புதுமைப் பயணம்” : அன்றே சொன்னார் கலைஞர்!
நமக்கு நாமே "பயணத்தைப் பற்றிய செய்திகள் தமிழக மக்களிடம் பரவி ஆளுங்கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்தத் தொடங்கியது. அதே நேரத்தில் உயர்ந்த இடத்திலே இருப்பவர்களும், அரசிலே உள்ள மூத்த அதிகாரிகளும் "நமக்கு நாமே" பற்றிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
பயணத்தின் ஒவ்வொரு நாள் காலையிலும் ஸ்டாலின் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, முதல் நாள் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளையெல்லாம் எடுத்துச்சொல்லும் போது, ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனது மெலிந்த உடல் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளுமா என்று எனக்கு நானே எண்ணிக் கவலைப்பட்டாலும், அதை வெளியே காட்டிக்கொண்டதில்லை.
மக்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்களிடம் ஆட்சியினரின் தவறுகளை எடுத்துரைக்க வேண்டும் என்று தம்பி ஸ்டாலினுக்கு இப்போது வந்த எண்ணம் எனக்கும் அந்தக் காலத்தில் தோன்றாமல் இல்லை. 26-11-1980 அன்று திருச்செந்தூர் கோயில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணையாளர் சுப்ரமணியப் பிள்ளை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அறங்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டு, அதற்குத் தற்கொலை என்று பெயர் சூட்டி மறைத்திட முயன்றபோது தி.மு.கழகம் போர்க் குரல் கொடுத்தது.
விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நீதிபதி பால் அவர்கள், தனது அறிக்கையிலே குறிப்பிட்ட குற்றவாளிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தி.மு.கழகத்தின் சார்பில் எனது தலைமையில் 15-2-1982 அன்று மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை கழகத் தோழர்கள் உடன் நடந்து வர "நீதி கேட்டு நெடிய பயணம்" ஒன்றை நான் மேற்கொண்டேன். மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை 200 கிலோமீட்டர் தூரம், எட்டு நாட்கள், எட்டுப் பொதுக்கூட்டங்கள், பல இலட்சம் மக்களைச் சந்தித்த நிகழ்வு அது!
அந்தப் பயணம் மேற்கொண்ட போது மூன்றாவது நாள் காலையில் என் கால் முழுவதும் கொப்பளங்கள். என்னுடன் பயணத்தில் வந்த உதவியாளர் கொப்பளங்களைக் கண்டு கதறி, பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியதை நான் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. என்னுடன் பயணத்தில் வந்த மருத்துவர்கள் கொப்பளங்களுக்கு வழி நெடுக சிகிச்சை அளித்துக்கொண்டே வந்தனர். அந்த நினைவுதான் எனக்கு தம்பி ஸ்டாலின் தொலைபேசியில் பேசிய போது வந்தது.
தம்பி ஸ்டாலின் தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் மேற்கொண்ட "நமக்கு நாமே" விடியல் மீட்புப் பயணம் நமது கழக உடன்பிறப்புகளுக்கிடையே எழுச்சியையும், மக்களிடையே நம்பிக்கை கலந்த விழிப்புணர்ச்சியையும், நடுநிலையாளர்களிடையே நல்லெண்ணத்தையும், எதிர்க்கட்சியினரிடையே மருட்சியையும், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத்தாரிடையே ஆக்கப்பூர்வமான ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
"நமக்கு நாமே" என்ற பெயரே எல்லோருடைய இல்லங்களிலும் இரண்டறக் கலந்துவிட்ட சொல்லாகியிருக்கிறது. மொத்தத்தில் ஸ்டாலினின் இந்தப் பயணம் வெற்றிப்பயணம்; கழக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புதுமைப் பயணம்; இந்தப் பயணம் தம்பி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதொரு மைல் கல்!
- கலைஞர் கடிதம் (15-12-2016)
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!