Tamilnadu
“தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் மைந்தர்கள்..”: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
"உங்களில் ஒருவன்" நூலை ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, "தமிழர்களும், மளையாளிகளும் ஒரே மண்ணின் மைந்தர்கள்.நாங்கள் சகோதர, சகோதரிகள். மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் நூல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியது மட்டுமின்றி தமிழ் சமூக வரலாற்றையும் கூறுகிறது.
தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மனதில் திராவிடக் கொள்கைகள் எப்படி வேரூன்றியது என்பது குறித்து இந்த நூல் கூறுகிறது. 1960-70களில் இந்தியா அரசியலிலும், சமுதாயத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை படம்பிடித்து காட்டுகிறது உங்களில் ஒருவன் நூல். மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞரணி தலைவராக இருந்து கட்சியின் தலைவரானார். இப்படி படிப்படியாக உயர்ந்து முதல்வரனார்.
கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் நபராக நிற்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!