Tamilnadu
“2026-க்குள் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பட பயிற்சி அளிப்போம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரை:
உங்கள் அனைவர்க்கும் என்னுடைய அன்பான வணக்கம்!
இந்த நாள் என்னுடைய வாழ்விலே ஒரு பொன்னாளாக அமைந்திருக்கிறது!
இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள் காண்கிறேன் என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் தொடக்க நாள் இது. அதனால் தான் இது, 'என்னுடைய வாழ்விலே கிடைத்திருக்கக்கூடிய பொன்னாள் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.
தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டிருக்கக்கூடிய நான் அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க, உருவாக்கிய திட்டம்தான் இந்தத் திட்டம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி - அனைவரும் அனைத்திலும் முதலாவதாக வந்தார்கள் என்ற நிலையை உருவாக்கும் திட்டம்தான் இந்தத் திட்டம், இந்தத் திட்டத்தினுடைய நோக்கம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில் - ஆராய்ச்சியில் - சிந்தனையில் - செயலில் - திறமையில் - சிறந்தவர்களாக மாற்றிட வேண்டும் என்கிற அந்த உணர்வோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லோரும் பள்ளிக்கல்வியை முடித்துவிடுகிறார்கள். கல்லூரிப் பட்டங்களையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்குமே வேலை கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் அது ஒரு கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது. வேலை இல்லை என்று சொல்லும்போது, சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். "வேலைகள் நிறைய இருக்கிறது; ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. இதைக் கேட்கும்போது மிக வருத்தமாகத் தான் இருக்கிறது. பட்டம் வாங்கியிருக்கிறார்கள், ஆனால், அந்தப் படிப்பு குறித்த தெளிந்த அறிவு எல்லோருக்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 33 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று நாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இன்னொரு பக்கம், திறமைக் குறைவு பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம். பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமமே இல்லை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில், அப்படிக் கற்பவர்களுக்குத் தனித்திறமைகள் இல்லை என்பது பற்றியும் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
''இந்தியாவைப் பார்த்து உலகநாடுகள் பயப்படுகிறார்கள் - இந்தியாவில் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்து பயப்படவில்லை. இந்தியாவில் இருக்கும் இளைய சக்தியின் எண்ணிக்கையைப் பார்த்து பயப்படக்கூடிய பெருமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இந்த இளையசக்தி முழுமையான திறமை கொண்டதாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இப்படிப்பட்ட குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பதால் பயன் இல்லை - அவர்களை நிறையுடை மனிதர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம்,அதற்காகத் தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தான் 'நான் முதல்வன்' என்ற அந்தப் பெயரையும் நாம் சூட்டியிருக்கிறோம்.
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா - என்று பாடினார் மகாகவி பாரதிஅவர்கள்.
இந்தப் பாடலின் இறுதி வரியாக, அதேநேரம் உறுதிமிகு வரியாக ஒரு வரியை எழுதியிருப்பார் பாரதியார் அவர்கள்.
''நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா வா வா" என்று எழுதினார்.
அத்தகைய ஒரு பெருஞ்செயல்தான் 'நான் முதல்வன்' என்கிற அந்தத் திட்டமாக அமைந்திருக்கிறது.
மாணவச் செல்வங்களே!
பள்ளிப் பிள்ளைகளே!
கல்லூரி மாணவ, மாணவியரே!
நீங்கள் அனைவரும் உரக்கச் சொல்லிப் பாருங்கள்!
'நான் முதல்வன்'
நான் முதல்வன்
நான் முதல்வன் - என்று சொல்லிப் பாருங்கள்!
உங்களுக்குள் ஒரு சக்தி பிறக்கும்.
உங்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும்.
உங்களுக்கு ஒரு தைரியம் பிறக்கும்.
நான் முதல்வன் என்று சொல்லுவது எளிது. ஆனால், எல்லாவற்றுக்கும் முதல்வன் ஆவது என்பது எளிமையான செயல் அல்ல. அதற்கு முதலில் உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களது தனித்த திறமைகள் எது என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும். பலர், தங்களுடைய பெற்றோர்கள் சொன்னார்கள் என்று மருத்துவம் படிப்பது, பொறியியல் படிப்பது என்று சேர்கிறார்கள். எந்தப் படிப்பில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ - அந்தப் படிப்பில் சேருங்கள். அந்தப் படிப்பு, பட்டம் வாங்குவதற்காக மட்டுமில்லாமல், அந்தப் படிப்பு குறித்த முழுமையான அறிவை நீங்கள் தெளிவு பெற வேண்டும்.
மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே போட்டிகளும் அதிகம் ஆகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றன. எனவே கல்லூரிப் பட்டம் என்பதை எளிதாக, எல்லோரும் பெற்றுவிடலாம். ஆனால், அந்தப் பட்டத்தைத் தாண்டிய தனித்திறமை இருந்தால்தான் இந்தப் போட்டி நிறைந்த உலகத்தில் உங்களால் வெல்ல முடியும்.
உலகப் போட்டியில் உங்களையும் ஒரு மனிதராக நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும். உங்களை நீங்களே திறமைசாலிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பட்டங்கள் பெற்றவர்களுக்குக் கூட, நான்கு பேருக்கு முன்பாகப் பேசுவதற்குத் தயக்கம் இருக்கிறது. எடுத்துச் சொல்வதில் தெளிவு இல்லை. தைரியம் இல்லை. புதிய முயற்சிகள் இல்லை. ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற ஒரு சலிப்பு இருக்கிறது. நமக்கெல்லாம் எங்கே பெரிய வேலை கிடைக்கப் போககிறது என்ற விரக்தி இருக்கிறது.
இவை எல்லாம் ஒரு மனிதரை வீழ்த்தும் காரணிகள். ஒரு மனிதனுக்குப் புறத் தடைகளைவிட உள்ளார்ந்த அந்தத் தடைகள்தான் அதிகம் இருக்கிறது. இந்தப் புறத் தடைகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உடைக்க வருகிற திட்டம்தான் நான் முதல்வன் திட்டம் ஆகும் என்பதைப் பெருமையோடு சொல்கிறேன்.
நான் திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். இது மாணவர்கள் அனைவரையும் தகுதிப்படுத்தும் திட்டம். இளைஞர்கள் அனைவரையும் உயர்த்தும் திட்டம். தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான் இந்தத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் மூலமாக நிறுவனங்களை, தொழில் நிறுவனங்களை, அரசு நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்போம். அதற்கான முயற்சியில் நாம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம். அரசு நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், தகுதியானவர்களாக இளைஞர்களை உருவாக்குவதை எனது முக்கியக் குறிக்கோளாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கல்வியில் சிறந்தவர்களாக -
சிந்திக்கும் திறம் படைத்தவர்களாக -
தனித்திறமை கொண்டவர்களாக -
தொழில்திறன் கொண்டவர்களாக -
நிறுவனங்களை நடத்துபவர்களாக -
அவர்களை உருவாக்க எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
கலைத் திறன் படைத்தவர்கள் கலைஞர்களாகட்டும். தொழில் திறன் படைத்தவர்கள் தொழில் முனைவோர் ஆகட்டும். விளையாட்டில் ஆர்வம் கொண்டோர் விளையாட்டு வீரர்கள் ஆகட்டும். நிறுவனங்கள் நடத்தத் தெரிந்தோர் நிறுவனங்களைத் தொடங்கட்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல் - வேலை கொடுப்பவர்களாக எல்லோரும் மாற வேண்டும். பிற நிறுவனங்களின் கதவுகளைத் தட்டுபவர்களாக இல்லாமல் - இவர் நிறுவனத்தைப் பிறர் பயன்படுத்திக் கொள்ளட்டும். அந்த வரிசையில், உங்கள் பெயரும் இணைய வேண்டும் என்றால், அப்போது, உங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த 'நான் முதல்வன்' திட்டம் என்பதை நான் மீண்டும், மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல - திறமை சார்ந்ததாக மாறவேண்டும். வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாறவேண்டும். நீங்கள் அடையும் உயரம் சலுகை சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாறவேண்டும்.
அத்தகைய திறமையை உங்களுக்கு உருவாக்க - உங்களுக்காக உருவாக்க ஒருவன் இருக்கிறான் - அதுதான் இந்த நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை இன்று முதல் நீங்கள் நினைவில் வையுங்கள். உங்களது மூத்த சகோதரனாக இருந்து - உங்கள் வளர்ச்சியை தூரத்தில் இருந்து நானே நேரடியாகப் பார்க்கப் போகிறேன்.
அதற்காக எனது நேரடி மேற்பார்வையில் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். உங்கள் படிப்பை கவனிப்போம். உங்கள் தனித்திறமையை வளர்த்தெடுப்போம். உங்கள் மனதில் அறிவியல் திறனை உருவாக்குவோம். உங்களுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டுவோம். உங்களுக்கு விருப்பமான பயிற்சிகளை நாங்களே தருவோம். தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவோம். புதிது புதிதாக உருவான படிப்புகளை அறிமுகம் செய்வோம்.
அந்தப் படிப்புகளுக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவோம். நவீனம் அனைத்தையும் உங்களது உள்ளங்கையில் கொண்டு வந்து சேர்ப்போம். மொழித் திறனை மேம்படுத்துவோம். தாய் மொழியாம் தமிழ் மொழியா? அதை அனைவர்க்கும் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். உலக மொழியாம் ஆங்கிலமா? அதில் அனைவர்க்கும் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
உடல்பயிற்சியும் - உள்ளப்பயிற்சியும் வழங்குவோம். மனப்பயிற்சியும், குணப்பயிற்சியும் நிச்சயம் வழங்குவோம். ஒரு வரியில் சொல்வதென்றால் உங்களைப் பெற்ற தாய் போல் - உங்களுடைய நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் 'நான் முதல்வன்' என்கிற அந்தத் திட்டம். அனைவரையும் உள்ளடக்கிய - அனைத்துத் துறை வளர்ச்சி என்று நான் சொல்லி வருகிறேன். இதான் திராவிட மாடல் என்று நான் சொல்லி வருவது உங்களுக்கு இப்போது புரியும். தெரியும்.
2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். இப்படிப் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் – 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். இதற்காக மாணவர்களுக்குப் பயிற்சி தரப் போகிறோம். அதற்கு முன், பயிற்சி தரக்கூடிய ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி தரப் போகிறோம்.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற வழிகாட்டி மையங்களாகப் பள்ளிகள் இனி மாறும். என்ன வேலைக்கு தகுதிப்படுத்தலாம் என்பதன் வழிகாட்டி மையங்களாக கல்லூரிகள் இனி மாறும். வேலை தேடுபவர்களுக்குத் தகுதிப்படுத்தும் மையங்களை அரசே நிறுவும். மொத்தத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் தமிழ்நாடு அரசு தகுதிசால் மனிதர்களாக மாற்ற நினைக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்பதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.
சில திட்டங்கள் சில வாரங்களுக்கு பயன்படும். சில திட்டங்கள் சில மாதங்களுக்கு பயன்படும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்கு பயன்படும். ஆனால் இந்தத் திட்டம் என்பது தலைமுறை தலைமுறைக்குப் பயன்படும் திட்டம் ஆகும். கால் நூற்றாண்டு - அரை நூற்றாண்டு கழித்தும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி - மு.க.ஸ்டாலின் என்ற ஒரு முதலமைச்சர் உருவாக்கிய 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மூலமாக நான் முன்னேறினேன் என்று ஒருவர் சொன்னால், அதைவிட வேறு பெரிய பெருமை எனக்கு நிச்சயமாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே!
உங்கள் முதலமைச்சரான இந்த மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன், பாராட்டுகிறேன். வருங்காலச் சமுதாயம் உங்களுக்கு ஒளிமயமானதாக ஆகப் போகிறது. உங்களது வாழ்வில் மலர்ச்சி ஏற்படப் போகிறது.
இன்று முதல் நீங்கள் புதிய மனிதர்களாக மாறப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றும் வாய்ப்பை நான் பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளிகளில் ஏற்படுத்த இருக்கும் பயிற்சிகள் - கல்லூரிகளில் தொடங்க இருக்கும் பயிற்சிகள் பற்றி விரிவாக அரசின் சார்பில் விரைவில் அதற்குரிய அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்படும். அந்த அறிவிப்பு அறிவின் உதயமாக அமையும்.
உங்களில் ஒருவனான நான் - எனது பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததை எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். உங்கள் அனைவரையும் சந்தித்தற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அது மட்டுமல்ல, பிறந்த நாள் வாழ்த்தை இங்கே நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது என் செவிகளில் விழாமல் இல்லை, அந்த வாழ்த்தையும் ஏற்றுக் கொண்டு என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!