Tamilnadu

“கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவை தேடுகிறேன்”: 'உங்களில் ஒருவன்’ வெளியீட்டு விழாவில் கனிமொழி MP உருக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டு, நூலினை வெளியிட்டார். மேலும் இவ்விழாவில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழாவின் நிறைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், ‘கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி’ என்ற திருக்குறளுடன்கனிமொழி எம்.பி தனது வரவேற்பு உரையை தொடங்கினார்.

அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை வாழ்த்தி வரவேற்றார். அப்போது, “ஒன்றிய பா.ஜ.க அரசு 2 இந்தியாக்களை உருவாக்குகிறது; ஒன்று பணக்காரர்களின் இந்தியா, மற்றொன்று ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கும் இந்தியா என முழங்கிய நவீன இந்தியாவின் நம்பிக்கை ராகுலை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து “சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை வரவேற்கிறேன்; நீட் ஒழிப்பிற்காக தொடர்ந்து களமாடும் அவரது குரல் நெஞ்சுக்கு நீதியிலும் ஒலிக்கட்டும்” என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்.

பின்னர் அனைத்து தலைவர்களையும் வரவேற்றுப் பேசிய பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து கனிமொழி எம்.பி பேசியது ஒட்டுமொத்த அரங்கத்தையும் ஒருகணம் நெகிழ்ச்சியில் மூழ்கச் செய்வதாக அமைந்தது.

அப்போது, “ஆயிரமாயிரம் கண்கள் இருக்கும் இந்த அரங்கில் இதையெல்லாம் பார்த்து பெரிதுவக்கும் இரண்டு கண்களைத் தேடுகிறேன். உங்களை வாரியணைத்து உச்சி முகர்ந்து “வாழ்க உன் பணி ஸ்டாலின்” என கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவைத் தேடுகிறேன்!” எனத் தெரிவித்திருந்தார்.

Also Read: தொடங்கியது ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா... ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வருகை!