Tamilnadu

“தேசிய அரசியலில் முக்கியப்பங்காற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘TOI’ நாளேடு பாராட்டு!

தேசிய அரசியலில் முக்கியப்பங்காற்றும் நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருப்பதாக ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திராவிடக்கேள்வி என்ற தலைப்பில் 24.2.2022 அன்று தலையங்கம் தீட்டியுள்ளது.

திராவிடக் கேள்வி என்ற தலைப்பில் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு:-

தேசிய அரசியலில் மிகப்பெரியபங்காற்றிட வேண்டிய நிலையில் தற்பொழுது மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். ஆனால் எந்தப் பக்கம் அவர் சாய்வார்? என்பதே கேள்வி.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வை திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இது, தேசிய அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கையை உள்ளார்ந்து வலிமைப்படுத்தி உள்ளது.

அனைத்து மாநகராட்சிகளிலும், பெரும்பான்மையான நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் தி.மு.க. பெற்றுள்ள மாபெரும் வெற்றியானது தற்பொழுது முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி கே.பழனிசாமியாலும், ஓ.பன்னீர்செல்வத்தாலும் உரிமைக்குழு பாங்கில் (பாணியில்) நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.விற்குள் மேலும் கலக்கத்தை உண்டாக்கக்கூடும்.

கடந்த ஆண்டு தோல்வியிலும், நம்பிக்கைக்குரிய முறையில் செயல்பட்ட தனது கூட்டணிக் கட்சிகளை குப்பைக் கூளங்களாக, வேண்டாத பொருள்களாகக் கருதி அ.தி.மு.க. ஒதுக்கித்தள்ளியது போலல்லாமல், தற்பொழுது ஆளும் கட்சியான தி.மு.க.வானது தனது கூட்டாளிகளான காங்கிரசையும், இடதுசாரிக் கட்சிகளையும் மாபெரும் வெற்றித் தடம் பதிப்பதற்காக தன்னுடன் அழைத்துச்சென்றது.

தி.மு.க.வின் அணியில் இருந்த காங்கிரசுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. தேசிய அளவில் காங்கிரசுக்குப் போட்டிக்கட்சியான பா.ஜ.க. தனித்துப்போட்டியிட்டு மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 28 இடங்களில் சில வெற்றிகளைப் பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் திரு.மு.க.ஸ்டாலின் மீது மீண்டும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருப்பதானது தேசிய அளவில் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். காங்கிரசு இடம் பெறாத, பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணி அமைத்திட விரும்பியவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மராட்டிய சிவசேனைக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது என்பதை இங்கு நினைவு கூர்ந்திட வேண்டும்.

இந்தியா முழுமைக்குமான அரசியல் கூட்டணிகளில் காங்கிரசு போன்ற முக்கியமான (உள்ளூர்) கூட்டாளிகளை விலக்கி விடுவதில் மு.க.ஸ்டாலின் ஆர்வம் கொண்டவராக இல்லை; நல்ல வலிமையான நிலையைப் பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் கூறுவதை கேட்கப்பட வேண்டும்; செவி சாய்க்கப்பட வேண்டும்.

1989ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றங்கள் அனைத்திலும், 39 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ்நாடு, அரசாங்கம் அமைப்பதில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. தி.மு.க. 1989, 1996, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் (ஒன்றிய) அமைச்சரவையில் இடம் பெற்றது.

அதே நேரத்தில் 1991, 1998ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க.வின் ஆதரவும் தேவைப்பட்டது. 2003ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)யில் தி.மு.க.வைத் தக்க வைத்துக் கொள்ள A.B.வாஜ்பாய் தவறியமையும், அ.தி.மு.க.வுடன் தவறான நேரத்தில் செய்துகொள்ளப்பட்ட தேர்தலுக்கு முந்தைய பா.ஜ.க. கூட்டணியும், 2004ஆம் ஆண்டு வெற்றியை வெறுமையாக்கின. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(UPA)யின் எழுச்சிக்கு உதவின.

தமிழ்நாட்டில் தனது கால் தடத்தை அதிகப்படுத்துவது பா.ஜ.க. வின் நீண்ட காலத் திட்டமாக இருப்பினும், அ.தி.மு.க.வின் செல்வாக்குக் குறைவதைப் பற்றி (பா.ஜ.க.) கவலை கொள்ளும். ஏனெனில், 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேசியத் தேர்தல்களில் ஒவ்வொரு பெரிய மாநிலமும் முக்கியமானதாகும். ஆனால் அரசியலில் எந்தக் கூட்டணியும் நிலையானதல்ல. கே.சி.ஆர்., மம்தா, உத்தவ் ஆகிய முதல்வர்களுடன் ‘ கூட்டாட்சி அணியில்’ திரு.மு.க.ஸ்டாலின் இணைவாரா? அல்லது திராவிடத் திடீர் திருப்பத்தின்பால் (அவர்களைக்) கவர்ந்திழுப்பாரா? அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்திருந்தாலும் பெரிய வேறுபாடு ஏற்பட்டிருக்காது! சட்டமன்றத் தேர்தலில்பெற்ற 45.38% வாக்கு வங்கியை தி.மு.க. முன்னணி தற்பொழுது 4.61% அதிகரித்துக்கொண்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த அ.தி.மு.க. கூட்டணி சிதறாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து இருந்திருந்தாலும் விளைவில் பெரிய வேறுபாடு இருந்திருக்காது. அரசியல் கட்சிகளின் வாக்கு வீதங்களைப் பற்றிய புள்ளி விவர ஆய்வு இதனை வெளிப்படுத்துகிறது.

இதற்கான காரணத்தை அதிகம் தேட வேண்டியதில்லை. சட்டமன்றத்தேர்தலில் 45.38% வாக்கு விகிதம் பெற்றிருந்த தி.மு.க. தலைமையிலான கூட்டணி தற்பொழுது தனது வாக்கு விகிதத்தை 4.61% உயர்த்தி, மொத்தத்தில் 49.99% ஆக ஆக்கிக் கொண்டுள்ளது.

ஆனால் அ.தி.மு.க. மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் (பா.ஜ.க., பா.ம.க.) ஓட்டு மொத்தவாக்கு விகிதம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பெற்றிருந்த 39.71%லிருந்து தற்பொழுது 32.07% ஆகக்குறைந்துள்ளது. அதே நேரத்தில் பா.ஜ.க.வுக்கு 2.79% உயர்வும், அ.தி.மு.க.வுக்கு 8.14% வீழ்ச்சியும், பா.ம.க.வுக்கு 2.29 விழுக்காடு புள்ளிகள் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளன" இவ்வாறு ‘தி டைம்ஸ் ஆப் இந்திய’ நாளேடு தமது தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளது.

Also Read: “எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கான கல்விக் கதவுகள் மூடப்படக் கூடாது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!