Tamilnadu

பிரியாணிக்கு பில் கட்டாமல் கத்தியை காட்டி மிரட்டி அராஜகம்: சென்னை போலிஸிடம் வசமாக சிக்கிய பிரபல ரவுடிகள்!

கொளத்தூர் மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகே பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த தயாநிதி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது உணவகத்திற்கு நேற்று மாலை பிரியாணி சாப்பிட சென்னை அடுத்த செங்குன்றம் சோலையம்மன் நகரைச் சேர்ந்த குமார் என்ற வாட்டர் வாஷ் குமார் (வயது 31) என்பவரும் பாடியில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கோபிநாத் (வயது25) ஆகிய இருவரும் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மேலாளர் தயாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மேலும் நாங்கள் ரவுடிகள் என்று எங்களிடமே பணம் கேட்கிறாயா என கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் 1500 ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து ஓடினர்.

இதுகுறித்து மேலாளர் தயாநிதி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட கொளத்தூர் போலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு ரவுடி ஒழிப்பு போலிஸாருக்கு தெரியப்படுத்தியதில் உடனடியாக போலிஸார் களத்தில் இறங்கி செங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்கின்ற வாட்ட ர்வாஷ்குமார் மற்றும் பாடி கோபிநாத் ஆகிய இருவரையும் நேற்று இரவு கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் இவர்கள் இருவரின் மீதும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள காவல் நிலையில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது . மேலும் போலிஸார் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்தவரை கம்பி எண்ண வைத்த கயத்தாறு போலிஸ்!