Tamilnadu

“முதல் பேட்டி முதல் அரசு வீடு வரை..” : மக்களின் மனம் உணர்ந்து அன்பு மாணவன் கலாமை கொண்டாடும் தி.மு.க அரசு!

உலக நாடுகளுக்கு இடையே அதிகாரப்போட்டியில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மனிதன் கடைபிடிக்கவேண்டிய மனிதநேயமும் சமத்துவமும் குறித்து உலக மக்களுக்கு பாடம் எடுத்த சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சமீபத்தில் இணைய ஊடகத்தில் வைரலான வீடியோ ஒன்றை பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோவில் பள்ளிச் சிறுவன் ஒருவன் மனிதநேயம் குறித்து தெளிவுடன் விளக்கி பேசியிருப்பான். மனிதநேயம் இந்த பொது சமுகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை போகிறபோக்கில் விளக்கியுள்ளான் அந்தச் சிறுவன்.

சாதி மதம் எல்லாம் தப்பு; எல்லாருமே தோழர்கள்தான்!

அந்த வீடியோவில், உங்களுக்குப் பிடிக்காத நபர்கள் யார் எனப் பொதுமக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பேசிய சிறுவன், “நாம் யாரையும் பிடிக்காத எனச் சொல்லக் கூடாது. இங்கு அனைவரும் நம்மை போன்றவர்கள் தான். சிலருக்கு இங்குக் கஷ்டம் இருக்கும். அவர்கள் கஷ்டத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே யாரிடமும் சொல்லாமல் கூட இருப்பார்கள்.

இங்கு யாரையும் பிடிக்காது என்று சொல்லக் கூடாது. இங்கு எல்லாரும் நம் நண்பர்கள் தான். என்னைக் கூட எல்லாரும் பல்லன் என்று கூறுவார்கள். இங்கு இருக்கும் எல்லாரும் நமக்கு நண்பர்கள் தான். நம் நாடு ஒற்றுமையான ஒரு நாடு! ஒற்றுமை இல்லாமல் நாம் இருக்கக் கூடாது. இங்கு மனித நேயம் பரவ வேண்டும். இல்லையென்றால், ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் போல நிறையப் பேர் தோன்றும் வாய்ப்பு உள்ளது. எனவே , அங்கு மனித நேயம் மிக முக்கியம்” எனத் தெரிவித்திருந்தார்.

இணையத்தை ஆக்கிரமித்த சிறுவனின் பேச்சு உடனடியாக டிரெண்டானது. அதன் பின்னர், இந்த சிறுவன் யார் என்றும் இந்தச் சிறு வயதில் இவருக்கு இந்தளவு பக்குவத்துடன் பேசக் கற்றுக் கொடுத்த பெற்றோர் குறித்தும் அறிந்துகொள்ள ஒட்டுமொத்த நெட்டிசன்களுமே ஆர்வமாக இருந்தனர்.

பின்னர் இணைய ஊடகங்கள் அந்தச் சிறுவனை சூழந்து பேசத் தொடங்கியதும் அந்தச் சிறுவனின் குடும்பம், சென்னை கண்ணகி நகரில் வசிப்பதாகவும், இச்சிறுவனின் பெயர் அப்துல்கலாம் என்றும் சென்னையில் உள்ள கிருத்துவப் பள்ளியில்தான் படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

எங்களை வீடு காலி பண்ண சொல்றாங்க!

இதனையடுத்து, சிறுவன் பேட்டியளித்ததால், தற்போது அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டை காலி செய்யக் கூறியதாக அவரது தாயார் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “பையன் பேட்டிக்கொடுத்ததால வீட காலி செய்ய செய்ய சொல்லிட்டாங்க. நாங்க வீடு இல்லாமல் இங்கே வந்திருக்கோம். யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல. எங்களை வீடு காலி பண்ண சொல்றாங்க ஹவுஸ் ஓனர். நாங்கள் எப்படி வெளியே போனோம். வேணாங்க நீங்க உடனே காலி பண்ணுங்க ன்னு சொல்றாங்க.

10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்திருக்கோம். 2 ஆயிரம் ரூபாய் வாடகை. என் 4 குழந்தைகளை கூட்டிட்டு எங்கே போவேன்.. அந்த குழந்தை தந்த பேட்டி தவறா? அவனை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. எப்படி எங்களுக்கு மத்தவங்க மட்டும் வீடு தருவாங்க?” எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் சிறுவனை பாராட்டி வந்தனர்.

மனிதநேயம் பேசிய சிறுவன் கலாமை சந்தித்த முதல்வர்!

இந்நிலையில் நேற்றைய தினம் தலைமைச் செயலாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் அப்துல் கலாமை அவரது பெற்றோருடன் அழைத்துப் பேசி வாழ்த்தினார். அவருக்கு முதலமைச்சர் அன்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

மேலும் தனது பேச்சையும் செயலும் எல்லாக் காலமும் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது சிறுவனின் பெற்றோருக்கும் தனது பாராட்டை முதலமைச்சர் தெரிவித்தார். இணையங்களில் வைரலான சிறுவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாரட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாமை, முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும் அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

அன்பு சிறுவன் கலாமுக்கு அரசு சார்பில் வீடு !

கோரிக்கையை ஏற்ற தாயுள்ளம் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று துறை சார்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக உத்திரவிட்டார்.

தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவின் பேரில் இன்று மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டார், நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்தார். பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

மனித நேயர்களை கொண்டாடும் அரசு !!

இந்நிலையில், சென்னை சாந்தோம் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 125ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில், மாணவர் அப்துல் கலாமை தனது இருக்கையில் உடன் அமரவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொண்டாடிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

குடியிருப்பு ஆணை!

அதன்படி, இன்று தலைமைச் செயலகத்தில் சிறுவன் அப்துல்கலாம் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியிருப்பு ஆணையை வழங்கினார். அப்துல் கலாம் சிறுவனுக்கு, தி இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறித்த தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசளித்தார்.

Also Read: “சிறுவன் கலாமுக்கு அரசு சார்பில் வீடு வழங்க முதல்வர் உத்தரவு” : நாளைக்குள் ஆணை வழங்கப்படும் என உறுதி!