Tamilnadu
சாலையில் வெடி வெடித்து ரகளை.. தட்டிக்கேட்ட காவலரை கடித்து வைத்த அஜித் ரசிகர்கள் - நடந்தது என்ன?
அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ‘வலிமை’ படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
சுமார் 3 வருடங்களுக்கு பிறகு படம் இன்று வெளியாகியுள்ளதால் பல இடங்களில் அஜித் ரசிகர்கள், தங்களால் முடிந்த உதவிகளை அங்காங்கே செய்து வருகின்றனர். குறிப்பாக சிதம்பரத்தில், நடிகர் அஜித் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யாமல் இலவசமாக பால் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏழை எளிய குழந்தைகளுக்கு 25 லிட்டர் வரை பால் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் நடந்ததுகொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கே.எஸ் திரையரங்கில் ‘வலிமை’ படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதால், கோபமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அதனை அகற்ற வந்த ரசிகர்கள் மற்றும் சில போலிஸாரை சில ரசிகர்கள் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி அன்பு திரையரங்கில் கூடியிருந்த அஜித் ரசிகர்கள், தியேட்டரின் முன்புறமுள்ள ரயில்வே மேம்பால சாலையில் வெடி வெடித்து வைத்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலிஸார் வெடி வைத்த அஜித் ரசிகர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் போலிஸாரின் எச்சரிக்கையும் மீறி, வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்டதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள், அங்கிருந்த சுரேஷ் என்ற போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது கையை பிடித்து கடித்து வைத்து காயப்படுத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த காவலர் சுரேஷ், லால்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், காவலர் சுரேஷைக் கடித்த அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இரு அஜித் ரசிகர்களையும் கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர். அஜித் ரசிகர்களின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்