Tamilnadu

அரசு மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி சட்டவிரோத கருக்கலைப்பு.. 2 குழந்தைகளை பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னத்தம்பி - செல்வி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், செல்வி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து, சூளாங்குறிச்சி மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது செல்வியின் வயிற்றில் இருந்த சிசுவுக்கு இருதய குறைபாடு இருப்பது தெரியவந்தது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, இருதய குறைபாடுடன் குழந்தை பிறந்தால் சிரமம் ஏற்படும் என கருவை கலைக்குமாறு செல்வி கூறியதாகத் தெரிகிறது. ஆனால் 5 மாதமான நிலையில் கருவைக் கலைக்க முடியாது எனக் கூறி மருத்துவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பின்னர் வீடு திரும்பிய செல்விக்கு அப்பகுதி அருகில் உள்ள தனியார் மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்று, கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது செல்விக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சட்டத்தை மீறி கருக்கலைப்பு செய்ததாக மருந்துக்கடை உரிமையாளர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி முத்துக்குமாரி, உதவியாளர் கவிதா ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்த பெண் திடீரென இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: தி.மு.க பிரமுகரை தாக்கி, கொலை மிரட்டல்.. சிறையில் உள்ள ஜெயக்குமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!