Tamilnadu

மறைமுக தேர்தல் வரலாறு.. 21 மாநகராட்சிகளிலும் மேயர் தேர்வு எப்படி நடக்கும் தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 73, 74 வது திருத்தச் சட்டங்களின்படி சுயாதீனமாக இயங்கக்கூடிய வகையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 1994ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக மாநில அரசுகளே உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது.

புதிதாக உருவாக்கப்பட்ட மாநில தேர்தல் ஆணையத்தால் முதன் முறையாக 1996ல் நேரடி தேர்தலும், 2001ஆம் ஆண்டு நேரடி தேர்தலும், 2006ஆம் ஆண்டு மறைமுக தேர்தலும் கடைசியாக 2011 ஆம் ஆண்டு நேரடி தேர்தல் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டான 2022ல், தமிழ்நாட்டில் மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி மீண்டும் மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்தார் ஜெயலலிதா; எனினும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி 2018ல் ஜனவரி 11ஆம் தேதி மீண்டும் நேரடித் தேர்தலுக்கான சட்டத்தைக் கொண்டுவந்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் நிலை அ.தி.மு.கவுக்கு இருக்கும் என்பதால், மறைமுக தேர்தலை மீண்டும் அ.தி.மு.க கொண்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த முடிவுக்கு கூட்டணியில் இருந்த பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு மக்களே நேரடியாக வாக்களித்து மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்து மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருப்பதால் 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க கூட்டணியினரே மேயர் மற்றும் துணை மேயர் ஆகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

Also Read: மைக்கேல்பட்டி, ஹிஜாப், கோவை, மயிலாப்பூர், ஒத்த ஓட்டு : சரமாரியாக சம்பவம் செய்த மக்கள் - வென்றது தி.மு.க!