Tamilnadu

”மக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க சட்டசபையை உடனே கூட்டுக” : புதுச்சேரி சபாநாயகரிடம் திமுக வலியுறுத்தல்!

மக்கள் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க உடனே சட்டசபையை கூட்ட வேண்டும் எதிர்ச்சட்சி தலைவர் இரா.சிவா சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி கூட்டப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளீர்கள். இதனை வரவேற்கின்றோம். அதேசமயம் புதுச்சேரி நீட் விலக்கு மசோதா கொண்டுவர வேண்டியது, மின்துறை தனியார் மய நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டியதும், முடிவுகள் எடுக்கப்பட வேண்டியதும் உள்ளது. எனவே தற்போது கூட்டப்பட உள்ள சட்டசபை கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு மேல் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

பெஸ்ட் (BEST) திட்டம்

சென்ற வருடம் பிப்ரவரி 25 ஆம் தேதி மற்றும் மார்ச் 30 ஆம் தேதி புதுவைக்கு வருகை புரிந்த பாரதப் பிரதமர் நநேந்திர மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால் புதுவையில் பெஸ்ட் (BEST) திட்டம் செயல்படுத்தப்படும் அதன் மூலம் புதுவை மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று அறிவித்தார். பாஜக கூட்டணி நடைபெறும் சூழ்நிலையில் பெஸ்ட் (BEST) திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விவாதித்தும் அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை கிடையாது. நீட் தேர்வு என்பதே தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமானதுதான். நீட் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு தடை போடுகிறது. எனவே ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்காக நீட் விலக்கு கேட்டு மசோதா தமிழகத்தில் மாண்புமிகு தளபதியார் அவர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை இயற்றிய மசோதாபோல புதுவை சட்டப்பேரவையிலும் இயற்ற வேண்டியது குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

ஒன்றிய அரசின் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.

புதுவைக்கு சென்ற நிதி ஆண்டில் (2021-2022) ஒன்றிய அரசு ரூ.1729 கோடி நிதி (Central Assistance) வழங்கியது. வரும் நிதி ஆண்டிற்கும் (2022-2023) அதே தொகையான ரூ.1729 கோடிதான் ஒன்றிய அரசு வழங்க உள்ளது. 1 சதவீத உயர்வு கூட அளிக்கப்படவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் கோரியபடி ரூ.2,000 கோடி கூடுதல் நிதியாக 2022-2023 நிதி ஆண்டிற்கு ஒன்றிய அரசு வழங்க இந்த சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் இயற்றக் கோருகிறேன்.

பயிர்களுக்கு மழை நிவாரணம்:

புதுச்சேரியில் கடந்த ஆண்டு 50 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவு கன மழை பெய்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமானது. இதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு திமுகவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ரங்கசாமி நிவாரணமும் அறிவித்தார். ஆனால் அந்த நிவாரணம் இன்று வரை வழங்கவில்லை. ஒன்றிய அரசு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்பி மழை சேதப்பகுதிகளைப் பார்வையிட்டு சேதமதிப்பீடு செய்த பின்னரும் வழங்கப்படவில்லை.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி பதவிகளில் அட்டவணை, பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முன்பு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணை, தற்போதைய அரசால் 6.10.2021 அன்று வெளியிடப்பட்ட இரு அரசாணைகள் மூலம் ரத்து செய்யப்பட்டது. இதனால், தற்போது உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. எனவே அரசாணை ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டுகிறேன்.

மின்துறை தனியார் மய பிரச்சனை:

ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., கூட்டணி அரசும் ஒத்துழைத்து வருகிறது. ஆனால் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தாலும், அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததாலும், கைவிடப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரசீது வழங்கும் பணியை மட்டும் தனியாரிடம் அரசு ஒப்படைத்துள்ளது. இதற்கு ஒரு நுகர்வோருக்கு ரூ.2 கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது குறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

தனியார்/ நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயம்:

தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான மருத்துவ கட்டணம் முறைப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை அறிவித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசுக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமே நிர்ணயித்து வசூலிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதையே வசூலிக்கச் செய்ய வேண்டியது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

சட்டசபை அறிவிப்புகள் நிறைவேற்றப்படாதது:

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது. குறிப்பாக அரசுத் துறைகள் மற்றும் சார்பு நிறுவனங்களில் நிரந்தரமில்லாமல் வவுச்சர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது நிறைவேற்றப்படாதது ஏன் என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

கடன்சுமை பிரச்சனை:

புதுச்சேரியில் கடன் சுமை ரூ.10 ஆயிரம் கோடிக்குமேல் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாதந்தோறும் அரசு பல நூறு கோடிகளுக்கு பிணையப்பத்திரங்களை ஏலம் விட்டு வருகிறது. இதனை அடைக்க அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் என்ன? இதுவரை மொத்தம் புதுச்சேரி அரசுக்கு எவ்வளவு கடன் ஒன்றிய அரசிடமும், வெளிச் சந்தையிலும் உள்ளது என்பதை மக்களுக்கு அறிவித்து, கடன் சுமையை குறைக்க வேண்டிய நிலை உள்ளது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும் தனிக்கணக்கு தொடங்குவதற்கு முன்பு உள்ள கடன் தொகையைத் தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அரசு சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பின்மை பிரச்சனை:

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கரும்பு நிலுவைப்பணம் வழங்கப்பட வேண்டும். இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் வேலைவாய்ப்பின்மை அதிகளவு உள்ளது. இது இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு ஒரு காரணமாகவும் உள்ளது. புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளில் எந்த பஞ்சாலைகள் உடனடியாக திறந்து இயக்கப்பட முடியுமோ அவைகளை உடனடியாக திறந்து இயக்கி வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவைச்சம்பளம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து மாநில அரசால் அறிவிக்கப்பட்ட வெள்ளை அரிசி வழங்கப்படாதது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:

ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி தொகுதிதோறும் முகாம்களை நடத்தி ஏழை மக்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அந்த கார்டைக் கொண்டு எந்த மருத்துவமனையிலும் புதுச்சேரி மக்களால் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஜிப்மரில் கூட தமிழக மக்கள் கொண்டுவரப்படும் மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி மக்கள் எடுத்துச் செல்லும் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இது குறித்து விவாதித்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்டுத்தச் செய்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

மருத்துவ நிதியுதவி பிரச்சனை

புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் சுகாதாரத்துறையில் உயிர்காக்கும் திட்டத்தின் கீழ் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. இதற்கு விண்ணப்பித்து சிகிச்சை பெற்றுக் கொண்ட பல நோயாளிகளுக்கு இன்னும் நிதியுதவி தரவில்லை. இதனால் அக்குடும்பத்தினர் கடன்காரர்களாக மாறியுள்ளனர். இதை செயல்படுத்த வலியுறுத்த வேண்டியுள்ளது.

இவைகள் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இவைகளை தாங்களும் அறிவீர்கள் என்பதால் ஒருவார காலத்திற்கு சட்டமன்றத்தை நடத்தப்படும் என்ற திமுகவின் அறிவிப்பை ஏற்று செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார்.

Also Read: வணிகர் சங்கங்களுடன் நிதியமைச்சர் PTR ஆலோசனை: மு.க.ஸ்டாலின் அரசின் முழு பட்ஜெட் தயாரிக்கும் பணி விறுவிறு!