Tamilnadu

சர்ர்ரென வந்து பள்ளத்தில் பாய்ந்த சொகுசு கார்; ஐவருக்கு படுகாயம்; குமரியில் விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகருக்கும் அழகிய மண்டபத்திற்கும் இடையே ஆத்திவிளை பரம்பை பகுதியில் சாலையின் குறுக்கே ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது.

தற்போது, ரயில்வே இரட்டை பாதைக்கான பணிகள் தொடர்பாக சாலை துண்டிக்கப்பட்டு புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள், அங்கு கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியின் அருகிலிருந்து மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அழகிய மண்டபம் பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் பரம்பை பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டதை அறியாமல் நேராகச் சென்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இவ்விபத்தில் காரில் இருந்த ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக இரணியல் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரங்களில் பாலத்தின் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில், 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இரவு நேரத்தில் விபத்து நடைபெற்றதால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறியதோடு, சாலையின் குறுக்கே போதிய தடுப்பு வேலிகள் அமைக்கப் படாததால் தீவிபத்து நிகழ்ந்ததாகவும் மாற்று பாதைக்கான வழிகாட்டும் பலகைகள் முறையாக அமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

Also Read: அதிவேகமாக வந்து அப்பளமாக நொறுங்கிய கார்; பள்ளி மாணவன் பலி; இருவர் கவலைக்கிடம்; பல்லடத்தில் பரபரப்பு!