Tamilnadu

“என் அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தாதீர்கள்” - நீதிமன்றம் சென்ற இளையராஜா.. உத்தரவு போட்ட நீதிபதிகள்!

தமிழ் திரைப்பட இசையின் தனிப்பெரும் ஆளுமையாக இன்றும் இருந்து வருகிறார் இசைஞானி இளையராஜா. 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து தனது இசையால் பலரை கட்டிப்போட்டுள்ளார். பேருந்து, கார்களில் பயணம் செய்பவர்கள் இளையராஜாவின் பாடல்களைக் கேட்காமல் அந்த பயணத்தை முடிக்கவே முடியாது. குறிப்பாக இரவு நேர பயணம் முழுவதும் இளையராஜாவே நிறைந்திருப்பார்.

பலர் தூங்குவதற்கு முன்பு இவரின் பாட்டை கேட்டுக்கொண்டே படுத்துக்கிடப்பர். இப்படி எல்லா இடங்களிலும் காற்றைப் போல இவரின் இசையும் எங்கும் நிறைந்து இருக்கும். இளையராஜாவின் ஒவ்வொரு ரசிகருக்கும் அவரது பாடல்கள் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன. இளையராஜாவின் பாடல்களையே வாழ்வாகக் கொண்ட ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

90,2k கிட்ஸ் வரை எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் ஒரே இசையமைப்பாளராக இளையராஜா ஒருவரே இருந்து வருகிறார். எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் திரைத்துறையில் வெற்றி பெற்று வந்தாலும் 'ராஜா ராஜாதான்' என்றும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது உலகம்.

இளையராஜா

இந்நிலையில், இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது. எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தி வருவதாகவும் கூறி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் அமர்வுக்குச் சென்றது. அப்போது, நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார்.

இதனையடுத்து தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை. தனி நீதிபதி சட்டத்தின் பிரிவு 14ல் "பதிப்புரிமை" என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார். இசைப் பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது "எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு" பிரத்தியேக உரிமையாகும் என்று குறிப்பிட்டு வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Also Read: “உயிரை பணயம் வைத்து உடற்பயிற்சி” : 12வது மாடியில் தொங்கியபடி Push Up செய்த நபர் - ‘பகீர்’ சம்பவம்!