Tamilnadu

”மகளை சந்தோஷமாக கவனிக்காததால் ஆத்திரம்: மருமகனை வெட்டி சாய்த்த மாமனார்” - கல்பாக்கம் அருகே பயங்கரம்!

கர்நாடகவின் பெல்காமை சேர்ந்த மக்புல் (22) என்ற இளைஞனை சென்னையை அடுத்த கல்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகள் நிஷாந்தி (20) ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்துக்கு பின் மக்புல் உடன் கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு, நிஷாந்தியை முறையாக கவனிக்காமல் வேலைக்கும் செல்லாமல் இருந்திருக்கிறார் மக்புல்.

இதனை அறிந்த நிஷாந்தியின் தந்தையான அணுமின் நிலைய ஊழியரான ராஜேந்திரன், தனக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் மகளையும், மருமகனையும் தங்க வைத்திருக்கிறார்.

மேலும் மக்புலுக்கு வேலையும் ஏற்பாடு செய்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் கல்பாக்கம் வந்த பிறகும் மக்புல் பணிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில், அண்மையின் நிஷாந்தியின் தாய் இந்திராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்த அவரை நிஷாந்தி கவனித்து வந்தார். இதன் காரணமாக நரசங்குப்பத்தில் இருக்கும் ராஜேந்திரனின் வீட்டில்தான் மக்புலும் தங்கியிருந்தார்.

இப்படி இருக்கையில், நேற்று முன் தினம் மாலை நேரத்தின் போது மக்புல் இருந்த வீட்டில் இருந்து புகை வருவதை அக்கம்பக்கத்தினர் கண்டு சென்று பார்த்தபோது அங்கு மக்புல் ரத்த வெள்ளத்தில் வெட்டப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார்.

உடனடியாக சதுரங்கப்பட்டிணம் போலிஸாருக்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை முடுக்கிவிட்டனர்.

அதில், “ராஜேந்திரன் மீது சந்தேகம் வரவே அவரை விசாரித்த போதுதான் உண்மை புலப்பட்டிருக்கிறது. அதில், தனது மகளை திருமணம் செய்துக்கொண்டு வறுமையில் வாழ வைத்திருக்கிறார் மக்புல். இங்கு வரவழைத்தும் வேலை ஏற்பாடு செய்து கொடுத்தும் போகாமல் திருட்டுத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் தன்னை பலரும் ஏளனமாக பார்த்து வந்தார்கள். அறிவுரை வழங்கியும் மக்புல் கேட்கவில்லை. இதன் காரணமாக கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியதால் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து மக்புலை சுத்தி மற்றும் அரிவாளால் வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தேன்” எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ராஜேந்திரனை கைது செய்து போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

Also Read: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வே வேலை; கூறுப்போட்டு விற்று 1 கோடி மோசடி; சுருட்டல் மன்னன் சிக்கியது எப்படி?