Tamilnadu

“வாக்களித்தால் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு..” : போலி காசோலையை வழங்கி மக்களை ஏமாற்றிய பா.ஜ.க கும்பல்!

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவு பெற்றதை ஒட்டி தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு தேர்தல் பரப்புரையை நிறைவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் வாக்காளர்களை கவர பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு குறுக்குவழியில் அ.தி.மு.க பா.ஜ.க கட்சிகள் செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் பணப்பட்டுவாடா கொடுத்தவர்களை மக்களே பிடித்து போலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் மீண்டும் சென்னையில் அரங்கேறியுள்ளது.

2014 தேர்தலில் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் டெபசிட் செய்யப்படும் எனக் கூறிய பா.ஜ.கவினர், அதன் மினி வெர்ஷனாக, தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களை ஏமாற்ற போலி காசோலை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியின் 110 வார்டின் புஷ்பா நகரில் பா.ஜ.கவைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் வாக்குச் சேகரிக்கும்போது, பா.ஜ.கவிற்கு வாக்களித்தால், 5 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு உதவும் வகையில் காசோலை வழங்கப்படும் என்றும், மேலும் 5 லட்சம் வரை உதவும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து தரப்படும் என்றுக் கூறி வாக்குக் கேட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, மாதிரி காசோலையை ஒன்றையும் வழங்கியுள்ளனர். இதனையறிந்த தி.மு.கவினர் அவர்களை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் அவர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், புதுமைப்பெண் என்ற என பெயரிட்டு போலி வங்கி காசோலையை தயாரித்து வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த விஜயபாஸ்கர்.. கட்சியிலிருந்து நீக்கக்கோரி அதிமுகவினர் முனுமுனுப்பு?