Tamilnadu
“134 கேள்விகள்.. 10 மணி நேரம் விசாரணை” : குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர் - பின்னணி என்ன?
ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து விசாரணைக்காக நேற்று (பிப்.12) ஆஜர் ஆன கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அ.திமு.க முன்னாள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கடந்த நவம்பர் 15ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் அன்றே அவர் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20 நாட்களாக தேடி வந்த நிலையில், கடந்த ஜனவரி 5 ம்தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் உச்சநீதிமன்ற ஜாமீனில் இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 31 ம்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணைக்காக ஆஜராக வந்தார். அப்போது ராஜேந்திர பாலாஜி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு போலிஸார் கூறினர்.
அதன்படி சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலிஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அவரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் ஆகியோர் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
விஜய நல்லதம்பிக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையேயான தொடர்பு குறித்தும், அவரது உதவியாளர்கள் பாபுராஜ் பலராமன் முத்துப்பாண்டி ஆகியோர் குறித்தும் அவர்கள் வாங்கிய சொத்து குறித்தும் மற்றும் 3 கோடி ரூபாய் மோசடி தொடர்பாகவும் 134 கேள்விகளை கேட்டு இதற்கான பதிலை அவரிடம் பெற்றுள்ளனர்.
இதற்கான பதில்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு அவரிடம் கையொப்பம் பெறப்பட்டது. அதன் பிறகு அவர் புறப்பட்டு சென்றார்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!