Tamilnadu

“தி.மு.க பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர் கைது” : போலிஸ் தீவிர விசாரணை - பின்னணி என்ன?

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரில் வசித்துவரும் தி.மு.க பிரமுகர் பிராங்கிளின் வீட்டில் நேற்று மர்ம நபர்கள் இரண்டு பேர் நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது வீட்டின் முன்பக்கத்தில் கிரில் கேட் மூடி இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் புதுச்சேரியின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது அரசியல் உள்நோக்கத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதலா என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட தி.மு.க பிரமுகர் பிராங்கிளின் வீட்டிற்கு, புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான இரா.சிவா இன்று நேரில் சென்று பிராங்கிளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே பிராங்கிளின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (எ) சதீஷ் (23) மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசுவது, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இதனை ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாததால், புதுச்சேரி மக்கள் அச்சத்துடனேயே தினந்தோறும் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Also Read: வாங்கிய Cake-க்கு காசு கேட்ட கடைக்காரரை அடித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் : ‘காப்பு’ மாட்டிய போலிஸ்!