Tamilnadu

“ரஞ்சித் ராய் சவுத்ரி கமிட்டி தெரியுமா?”: நீட்டுக்கு ஆதரவாக பேசிய பாஜகவினரை வறுத்தெடுத்த தமிழன் பிரசன்னா!

‘நியூஸ் 18’ தொலைக்காட்சி விவாதத்தில் ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் அரைவேக்காட்டுக் குறிப்புகளை அடியோடு குலை நடுங்கச் செய்தார் தமிழன் பிரசன்னா!

தொலைக்காட்சி விவாதத்தில் தமிழன் பிரசன்னா பேசியது வருமாறு:

ஊடகவியலாளர் : தமிழக சட்டமன்ற வரலாற்றில் 5 முறை ஆளுநருக்கு நீட் விலக்கு சட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது ஆனால் ஒருமுறை கூட மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்பப்பட்டதில்லை. இந்த நடைமுறை இப்போது மீறப்பட்டிருக்கிறது. அப்படி என்ன பிரத்யேகக் காரணம் நடைமுறை மீறப்படுவதற்கு?

தமிழன் பிரசன்னா : வார்த்தையில் ஒரு சின்னத் திருத்தம். நடைமுறை மீறப்பட்டிருக்கிறது இல்லை. எங்களுக்கு இருக்கிற நடைமுறையில், எங்களுக்கு இருக்கிற உரிமையை பிரயோகப்படுத்தியிருக்கிறோம். (விவாதத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. ஆதரவாளர்கள் நீண்ட நேரமாக ஏ.கே.இராஜன் கமிட்டியை குறை கூறி கொண்டிருக்கிறார்கள்.)

உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். ரஞ்சித் ராய் சவுத்ரி கமிட்டி தெரியுமா? அதற்கு பா.ஜ.க. ஆதரவாளர்கள் எனக்கு தெரியாது என்கிறார். தெரியாதா? அப்புறம் எதற்காக விவாதத்திற்கு வருகிறீர்கள். 2016ல் நீங்கள் ஆதரிக்கிற மோடி- நீங்கள் சொன்னீர்களே ஒரு கமிட்டியோட ரிப்போர்டை வைத்துக்கொண்டு எப்படி கவர்னருக்கு அனுப்ப முடியும் என்று. இந்த நீட்டை கொண்டு வந்தது. அந்த ரஞ்சித் ராய் சவுத்ரியோட ரிப்போர்ட் தான், 2016ல் மோடி அரசாங்கம் ஒரு கமிட்டியை உருவாக்குகிறது. அந்த கமிட்டியோட பேர்தான் ரஞ்சித் ராய் சவுத்ரி கமிட்டி, அந்த கமிட்டியோட ரிப்போர்ட்டை 92வது நாடாளுமன்ற நிலைக்குழுவில் வைக்கிறார்கள்.

நீங்கள் சொன்னீர்களே உங்க கமிட்டியோட டேட்டா என்ன, டேட்டாபேஸ் என்னவென்று- ஒரு கமிட்டியால்தான் ‘நீட்’ வந்தது. அந்த நீட்டை 92வது நாடாளுமன்ற நிலைக்குழுவின் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதை நாடாளுமன்ற நிலைக்குழு விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறது. அந்த நாடாளுமன்ற நிலைக்குழுவினுடைய ரிப்போர்ட் அதாவது ரஞ்சித் ராய் சவுத்ரி ரிப்போர்ட், அதன் 5.26 பாராவில் (96 பக்கத்தில்) சொல்கிறது. ‘நீட்’ என்பது மருத்துவத்தினுடைய கல்வி தரத்தை உயர்த்துகிறது. தகுதியற்றவர்கள் மருத்துவக் கல்வி படிப்பதை தடுக்கிறது. பணப் பிரயோகத்தை தடுக்கிறது. இந்த மூன்று விஷயத்தைசொல்கிறார்கள். அந்த 3 விஷயத்திற்கும் ஏ.கே.ராஜன் கமிட்டியில் பதில் உள்ளது. மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன், அவர் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல, உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். நீங்கள் சொன்ன இந்த மூன்று காரணங்கள் கடந்து அவர் சொல்கிறார்.

ஒரு கமிட்டியோட ரிப்போர்ட் என்ன பண்ணும் என்று கேட்கிறீர்கள். அந்த கமிட்டி தான் சொன்னது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் வைத்து விவாதிக்கப்பட்ட அந்த கமிட்டி சொன்னது என்ன வென்றால், இந்த அறிக்கை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்திடவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்திடவும் அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வை (CMET) பரிந்துரைத்தது. அதுதான் தற்போதைய “நீட்” என்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு நுழைவுத் தேர்வு தான் பரிந்துரைத்ததே தவிர ‘தகுதிக்தேர்வை' அல்ல. பத்தி 5.26யில் உள்ள இந்த பரிந்துரையில் இத்தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்களித்திடவும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள் பிறகு இத்தேர்வை ஏற்க முன்வந்தால் அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

The committee also recommends that in-troduction of CMET should be done acrossthe nation barring those States who wish to remain outside the Ambit of CMET

-Para 5.26 in the 92 nd report of the de-partment related PSC

2016 மே மாதம் ”நீட்” கட்டாயமாக்கும் குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2016 ஆகஸ்ட் மாதத்தில் பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதவில் “நீட்” கட்டாயமாக்க IMC சட்டத்தில் பிரிவு 10D சேர்க்கப்பட்டது. இந்த ரஞ்சித் ராய் சவுத்ரி கமிட்டியை வைத்துக்கொண்டுதான் நீங்கள் ஆட்டம்போடுகிறீர்கள். அவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘நீட்’வேண்டாம் என்று சொல்கிற மாநிலத்தை விட்டு விடுங்கள் என்று. அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். என் மாநிலத்தினுடைய உரிமையை அல்லது என்னுடைய உரிமையை என்னுடைய மாநிலத்திற்கான தகுதியை, என் மாநிலத்திற்கான கல்வியை என் மாநிலத்திற்கான நிறத்தை என் மாநிலத்திற்கான உணவை என்னுடைய மாநிலத்திற்கான உடையை, ஏன் எனக்கான தேவையை என் மாநிலம் நிறைவேற்றிக்கொள்கிற உரிமை என்பது, என்னுடைய ஜனநாயக உரிமை. அதை தடுப்பதற்கு நீங்கள் யார்?

நீங்கள் சொன்னீர்களே ஏ.கே.ராஜன் கமிட்டியில் கோச்சிங் கிளாஸ் போனவங்களோட டேட்டா இல்லை என்று உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் சொன்னீர்கள் (கோச்சிங்) கிளாஸ் போனவர்கள் 10 ஆயிரம் பேர், கோச்சிங் போகாதவர்கள் 15 ஆயிரம் பேர் என்று நீங்கள் அந்த டேட்டாவை எங்கே எடுத்தீர்கள். (அப்போது பா.ஜ.க. ஆதரவாளர் இந்து பேப்பர் என்கிறார்) உங்களிடம் ஒரு கேள்விதான். இந்து பேப்பரை நம்பும் நீங்கள், ஏ.கே.ராஜன் கமிட்டியை நம்ப வேண்டாமா? என்ன சார்.., இது இந்து பேப்பர் RTI-யிலா கொடுக்கிறார்கள்? என்ன சார் பேசுகிறீர்கள்.

நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள். மிக அருமையான கேள்வி அது, இத்தனை ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது. அதனுடைய தனித்தன்மை என்ன என்று எல்லோரும் கேட்டீர்களே., இன்றைக்கு எங்களுடைய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் என்கிற ஆண்மகன், சட்டமன்றத்திலே நின்றுககொண்டு போர்முழக்கமிட்டு இருக்கிறார். தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க என்று 3 முறை சொன்னார்கள். அல்லவா? என் மயிர்க்கால்கள் கூச்செறிகிறது. பேரறிஞர்.அண்ணா அவர்கள் “சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு” என்று பெயர் வைக்கிற போது ”தமிழ்நாடு வாழ்க” என்று ஒரு முறை சொன்னபோது இது மாநில சுயாட்சிக்கான உரிமை., தமிழ்நாடு வாழ்க என்று சொன்னபோது இது எங்கள் மண்! இது, எங்களுக்கான - எங்கள் இனத்துக்கான மண்! அந்த உரிமைக் குரல் இருக்கிறது அல்லவா?

அந்த உரிமைக்குரல்தான் இன்றைக்கு இத்தனை ஆண்டுகாலம் திரும்பவே அனுப்பப்படாமல் இருந்த ஒரு நடைமுறையை நீங்கள் மாற்றி அனுப்பியிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களே இல்லையா அது எங்களுடைய உரிமை. இந்த மண்ணுக்கான உரிமை. இந்த மண்ணுக்கான முதலமைச்சராய் தளபதி மு.க.ஸ்டாலின் என்கிற மிகப்பெரிய தலைவர் இந்த மண்ணை ஆண்டு கொண்டிருக்கிறார். அவர் சொல்கிறார். ‘நீட்’ என்பது ஒரு பெரிய அநீதி. நீங்கள் சொன்னது ஒன்று தரமான கல்வி! ஆனால் பிட் அடிப்பவன் எல்லாம் தேர்ச்சி பெறுகின்றான் அவன் சிறைச்சாலைக்கு போகிறான். மற்றொன்று மாணவர்களை கல்லறைக்கு அனுப்புகிறது இந்த ‘நீட்’. இந்த இரண்டு விஷயத்தை தவிர இதனால் என்ன பலன் இருக்கிறது. ஆளுநருக்கு நீங்கள் ஒரு சின்ன கேள்விதான் கேட்டீர்கள். அதற்கு ஸ்ரீராம் அவர்களிடம் பதில் இல்லை. என்ன சொன்னார். அவருடைய பர்சனல் ஒப்பினியனை இதிலே சொல்லமுடியும். நான் ஒரு வழக்கறிஞர். அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை கையோடு கொண்டு வந்திருக்கிறேன்.

சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் - ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டவுடன் அல்லது சட்டமேலவை உள்ள ஒரு மாநிலத்தின் இரண்டு அவைகளிலும் அது நிறைவேற்றப்பட்ட நிலையில் அது ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டு அவர் அந்த மசோதாவிற்கு இசைவு தெரிவித்து இருந்தாலும் அல்லது தமது இசைவை நிறுத்தி வைத்து இருந்தாலும் அல்லது குடியரசுத் தலைவர் பரிசீலனைக்காக அனுப்பி வைத்திருந்தாலும் அதை அறிவித்துவிட வேண்டும் தம்முடைய இசைக்காக அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் உடனுக்குடன் பரிசீலனை செய்து அந்த மசோதாவை அல்லது குறிப்பிட்ட விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யும்படி அவையை அல்லது அவைகளை கேட்டுக்கொள்ளும் தகவலுடன் திருப்பி அனுப்பவேண்டும்.

தம்முடைய செய்தியில் சில திருத்தங்களை அவர் பரிந்துரைக்கலாம் அவரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை அல்லது அவைகளை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்து திருத்தத்துடன் திருத்தம் இல்லாமலோ ஆளுநரின் இசைக்காக முன்வைத்த நிலையில் ஆளுநர் இசைவை தராமல் மசோதாவை நிறுத்திவைக்கக் கூடாது. ஒன்று வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது திருப்பி அனுப்பலாம். மூன்றாவது திருத்தம் செய்யலாம். நாலாவது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். இந்த நான்கைத் தவிர நியமன பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுநருக்கு தனிப் பட்ட கருத்துக்களை சொல்லக்கூடிய உரிமை கிடையாது ஏன் என்றால் இது மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். அதை ஒரு நியமன பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுநர் அவர்கள் சட்ட மசோதாவை திருப்பி அனுப்புவதோ அல்லது அந்த மக்களுக்கு எதிரான சித்தாந்தத்தில் தனிப்பட்ட கருத்து கூறுவதோ தவறு!

நீங்கள் சொன்னீர்களே “காமாலை கண்” என்று, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் என்கிற காமாலை பிடித்த கண் கொண்டு பார்த்ததால் தான் ‘நீட்’ விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார் என்பதுதான் என்னுடைய நேரடி குற்றச்சாட்டு.

இவ்வாறு விவாதத்தில் கழக செய்திதொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்தார்.

நன்றி: முரசொலி

Also Read: “நீட் தேர்வு குறித்து விவாதிக்க EPS, OPS-க்கு திராணி இருக்கா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!